சைக்கிளில் வலம் வரும் பொருளாதார மேதை

மிழக அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலினால் அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழுவில் இடம் பெற்றிருப்பவர் ஜீன் ட்ரெஸ். ஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் கடந்த 1959ஆம் ஆண்டில் பிறந்த இவர், கடந்த 1979ஆம் ஆண்டில் தனது 20ஆம் வயதில் இந்தியா வந்தார். கடந்த 2002ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமை பெற்றார்.

ஆரம்பத்தில் டெல்லியில் உள்ள பொருளாதாரவியல் பள்ளியில் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்த ஜீன் ட்ரெஸ், பின்னர், ஜி.பி. பந்த் அறிவியல் பள்ளியில் கெஸ்ட் லெக்சுரராகவும் பணிபுரிந்தார். பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென்னுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி குறித்து 12 புத்ககங்களையும், 150க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியிருக்கிறார். திட்டக்குழுவின் பேராசிரியராகவும் இருந்து ஆலோசனை வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர் ஜீன் ட்ரெஸ்.

இன்று ஊரடங்கு காலத்தில் கிராமப்புற பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நூறு நாள் வேலை திட்டத்துக்கு விதை போட்டவர் இவர் தான். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது இதற்கான வரைவு அறிக்கையை தயார்செய்து அரசிடம் தாக்கல் செய்ததன் அடிப்படையில்தான், இன்றைக்கு கிராமங்களில் அத்திட்டம் செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு பின்புலம்.

இவரது புத்தகங்கள் எளிய நடையில் பொருளாதாரத்தை ரத்தின சுருக்கமாக புரிந்துகொள்ளும வகையில் கருத்து ஆழமிக்கவை. இவர் தன்னுடைய கருத்துகளை புத்தகங்களில் மட்டுமல்லாமல், நடைமுறையிலும் செயல்படுத்தி வருபவர். தான் பணியாற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சைக்கிளில் சென்று பாடம் நடத்தும் வழக்கத்தை உடையவர். இதனால், தலைநகர் டெல்லியில் இவரை சர்வசாதாரணமாக காண முடியும்.

ஆரம்ப காலத்தில் டெல்லியில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுடன் வாழ்ந்தார். திருமணத்துக்குப் பிறகும் கூட தன் மனைவி பெல்லாவுடன் சிறிய ஓலைக் குடிசையில் தான் ஆரம்ப நாள்களை கழித்தார். ஒருமுறை டெல்லி ஜந்தர் மந்தரில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, இவரும் அதில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டார்.

அப்போது, பொதுமக்களுக்கு உணவு கொண்டு வந்த தன்னார்வலர்கள், ஜீன் ட்ரெசை அடையாளம் கண்டு அவருக்கு எக்ஸ்ட்ராவாக சப்பாத்திகளை அடுக்க முயன்றனர். இதை ஏற்க மறுத்த அவர், பிறரை போல் தனக்கும் 2 சப்பாத்திகள் போதும் என்று கூறி, அதை மறுதலித்து விட்டார். இச்சம்பவம் தன்னார்வலர்களை வியக்க வைத்தது. நாளேடுகளும் அவரை பாராட்டின.

இத்தகு பெருமைவாய்ந்த நபரை தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்து தனக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார நிபுணர் குழுவில் இணைத்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

4 × 1 =