இஸ்ரேல் காஸா வன்முறை போர்க்குற்றத்துக்கு சமமானது

 

லண்டனில் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

 

காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரக் கோரி, லண்டனில் இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி பாலஸ்தீன ஆதரவாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதல் போர்க்குற்றத்துக்கு ஒப்பானது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

புனித நகரான ஜெருசலேமுக்கு யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய 3 மதத்தினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன்காரணமாக காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் சிறுவர்கள் என தெரியவந்திருக்கிறது.

கடந்த திங்கள்கிழமை முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் இந்தத் தாக்குதலில், காஸா தரப்பில் 139 பேரும், இஸ்ரேல் தரப்பில் 9 பேரும் பலியானதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், காஸா வன்முறையை முடிவுக்கு கொண்டுவர பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, லண்டனில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி, சனிக்கிழமை மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது பாலஸ்தீனத்தை விடுவிக்கக் கோரி, ஆக்ரோஷமாக கோஷமிட்டனர்.

போராட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இஸ்ரேல் காஸா விவகாரத்தில், பிரிட்டன் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தை தண்டியாமல் விடக் கூடாது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி, சிறுவர்கள் உள்பட ஏராளமானவர்களை கொலை செய்தது போர்க் குற்றத்துக்கு ஒப்பான செயல். இஸ்ரேலுக்கு ராணுவம், ராஜீயம், நிதிரீதியில் ஆதரவை அளித்துவரும் பிரிட்டன், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

six + 10 =