பெண் கல்விக்கு முதலீடு செய்யுங்கள்

 

சர்வதேச நாடுகளுக்கு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

 

கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் நாடுவளம் பெற பெண்கல்விக்கு கூடுதலாக முதலீடு செய்ய சர்வதேச நாடுகள் முன்வர வேண்டுமன பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறைகூவல் விடுத்துள்ளார். மேலும், கென்யாவில் பெண்கல்வியை வலியுறுத்தி பள்ளி குழந்தைகள் மேற்கொள்ளவுள்ள விடியோ வாயிலான விழிப்புணர்வு பிரசாரத்தில் போரிஸ் ஜான்சன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

கரோனாவால் உலக பொருளாதாரமே முடங்கிய நிலையில், ஏழை நாடுகளில் பெரும்பாலான சிறுமிகள் தங்கள் கல்வியை இழக்க நேர்ந்தது. பள்ளிக்கூடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதால், ஏழ்மையில் உழலும் சிறுவர்களும், சிறுமிகளும் தங்களின் குடும்ப தேவையை பூர்த்தி செய்வதற்காக வேலைக்குச் செல்ல நேர்ந்தது. இதனால், கரோனாவுக்கு பிந்தைய உலகில் பெண் கல்வி வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

 

எனவே பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க பிரிட்டன் தலைமையிலான ஜி7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், வளரும் நாடுகளான பாகிஸ்தான், கென்யா, ருவாண்டா, சியரா லியான் ஆகிய நாடுகளில் கல்வி முறையை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்பதை உலக நாடுகள் பகிரும் வகையில், அதற்காக கூடுதலாக 55 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு செய்ய பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், உலகம் கரோனா தொற்றிலிருந்து விடுபடும் இந்த வேளையில், பெண்கள் 12 ஆண்டுகாலம் தரமான கல்வியை பெறுவதை உறுதிப்படுத்த நாம் செய்கின்ற முதலீடே அறிவுபூர்வமான முதலீடாக இருக்க முடியும். இல்லையெனில், பெருந்தொற்று காலத்தில் ஒரு தலைமுறையை இழந்தவர்களாக நாம் மாறிவிடுவோம் என்றார் அவர்.

ஏற்கெனவே வெளியுறவு அமைச்சராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்தபோதும் ஏழை நாடுகளில் பெண்கல்விக்காக அவர் குரல் கொடுத்தது நினைவுகூரத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

17 + ten =