இங்கிலாந்தில் 8 பகுதியில் உள்அரங்கில் கூடுவதற்கு தடை

இங்கிலாந்தில் இந்தியவகை கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கிர்கிலீஸ், பெட்போர்டு, பர்ன்லீ, லெய்சஸ்டர், ஹவ்ன்ஸ்லு, போல்டன், பிளாக்பர்ன் மற்றும் வடக்கு டைன்சைடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் உள்அரங்கில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த வாரம் உணவகம், மதுபான விடுதிகளில் உள்அரங்கில் வாடிக்கையாளர்கள் கூடி மகிழ அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் இந்திய வகை கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், இங்கு உள்அரங்கில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய தேவையை தவிர்த்து பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட வழிமுறைகள் வருமாறு;

தவிர்க்க முடியாத சந்திப்புகள் எனில், முடிந்தவரை காற்றோட்டமுள்ள பொதுவெளியில் சந்தித்து பேசவும். குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உங்களால் வீட்டிலிருந்து அலுவலக பணியை மேற்கொள்ள முடியாமல், அலுவலகம் செல்வதாக இருந்தாலோ அல்லது கல்விநிமித்தம் வெளியில் செல்வதாக இருந்தாலோ மட்டுமே வெளியில் வரவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த அறிவிப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிக்கை தங்களுக்கு கிடைக்கவில்லை என உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு சுகாதாரத் துறை மறுப்பு தெரிவித்ததால், குழப்பம் ஏற்பட்டது.

Add your comment

Your email address will not be published.

17 + two =