இந்திய செய்திகள் சில வரிகளில்…

* ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தன்னை சந்தித்த காஷ்மீர் அரசியல் தலைவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அப்போது, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் உறுதிசெய்ய வேண்டுமென பிரதமரிடம் அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.

* சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் கோவிட் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டதால், அந்த வகுப்பு மாணவர்களின் சந்தேகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று பதிலளிக்கிறார். சந்தேகங்களை “ஃ”பேஸ்புக், டுவிட்டர் அல்லது இமெயில் மூலமாக மாணவர்கள் அனுப்பிவைக்கலாம். மாலை 4 மணிக்கு அமைச்சர் அதற்கு பதிலளிக்கிறார்.

* ஸ்டேட் போர்டு எனப்படும் மாநில பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறையை 10 நாள்களில் வெளியிட வேண்டுமென மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

* டாய்க்கத்தான் 2021 எனப்படும் புதிய பொம்மைகள் தயாரிப்பு மற்றும் விளையாட்டுகளுக்கான போட்டிகளில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது, உள்ளூர் பொம்மை தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

* வெளிநாடு செல்பவர்கள் தடையற்ற பயணத்தை மேற்கொள்வதற்காக கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில், அவர்களின் பாஸ்போர்ட் எண்ணை இணைப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் இதுவரை 30 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

* கோவிட் பெருந்தொற்று காலத்திலும் தங்குதடையின்றி பாஸ்போர்ட் விநியோகம் செய்ததற்காக அனைத்து ஊழியர்களுக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.

* ரஷியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தஜிகிஸ்தானில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

* பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டுமென கட்சி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்தார்.

* பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற பெயரை கொண்ட அனைவரும் மோசடி பேர்வழிகள் என ராகுல்காந்தி பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அவதூறு வழக்கில் விசாரணைக்காக குஜராத் சூரத் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். அடுத்தகட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

* இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த 16 பேர் உள்பட 92 கைதிகளுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொதுமன்னிப்பு வழங்கினார். இதையடுத்து, அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

* கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டுமென மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

19 + 16 =