இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேர நிலவரப்படி 3 லட்சத்துக்கு 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2,104 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் 3 கோடியே 19 லட்சம் கொரோனா நோயாளிகளை கொண்ட அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 1 கோடியே 60 லட்சம் பேருடன் கொரோனா பாதிப்பில் இந்தியா 2ஆவது இடம் வகிக்கிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதாலும், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், டெல்லியில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசை உயர்நீதி மன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக 6 தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள், மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. நாடு முழுவதும் ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்புகிறோம் என தெரிவித்தனர்.
மேலும், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து மருத்துவமனைகளுக்கு அவற்றை எடுத்துச் செல்வதற்கான பயணம், சுமுகமாக நடைபெற ஏதுவான முடிவுகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நேரிடுவது தொடர்கதையாகிறது. கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெரும்பாலான நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

15 − 7 =