இந்திய முக்கிய செய்திகள்… 

* மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், சிஏஏ திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

* மறைந்த திரைப்பட நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன் ஆகியோரின் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

* கோவிட் தொற்றால் இறந்த அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குவது சாத்தியமில்லை என சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கையை விரித்தார்.

* விவசாய கடன் பெற எந்தத் தடையுமில்லை என சட்டசபையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

* கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. மேலும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

* தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

* புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டுவதற்கு ரூ.220 கோடி தேவைப்படுவதால், அதற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புதுவை சபாநாயகர் ஆர். செல்வம், காணொலி வாயிலாக கோரிக்கை விடுத்தார்.

* கடல் பகுதியை மாசுபடுவதிலிருந்து பாதுகாக்க ரூ.583 கோடி மதிப்பீட்டில் 2 கப்பல்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துகொண்டது.

* காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12ஆவது கூட்டம் நாளை மறுதினத்துக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நடைபெறுவதாக இருந்த இக்கூட்டத்துக்கு, இதன் தலைவர் வராததால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

* பிரதமரின் தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில், காஷ்மீரை சேர்ந்த 6 முக்கிய கட்சிகள் அங்கம்வகிக்கும் குப்கர் கூட்டணியும் பங்கேற்கிறது. இந்த முடிவை பாஜக வரவேற்றது.

* டெல்லியில் பாஜகவுக்கு மாற்றாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர்.

* ஹைதராபாத்திலிருந்து 2 லட்சத்து 21 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அவற்றை பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

* நாட்டில் கோவிட் 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமன அறிவுறுத்தினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

* கோவேக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை விவரங்களை மத்திய அரசின் மருத்துவ நிபுணர் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

two × 5 =