இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புபவர்களை சிறையில் அடைப்பது இனவெறிக்கு ஒப்பானது’

 

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புபவர்களை சிறையில் அடைப்பது இனவெறிக்கு ஒப்பான செயல் என்றும், அப்பட்டமான மனித உரிமைகள் மீறல் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

 

கரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் அந்நாட்டு பிரஜைகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், இந்த உத்தரவு மே 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த தடை உத்தரவு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதற்கு எதிராக இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. சொந்த நாட்டு மக்களை பெருந்தொற்று காலத்தில் காக்காமல், எல்லைகளை மூடுவது இனவெறியை பறைசாற்றுகிறது என்றும், இதை அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக விமர்சகர்கள் கருத்தை முன்வைத்தனர்.

இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் திங்கள்கிழமை பதிலளிக்கையில், கரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியவர்களுக்கு நாங்கள் தடை விதித்தோம். அப்போதும் இதே விமர்சனத்தை தான் முன்வைத்தனர். பெருந்தொற்றுக்கு சித்தாந்தம் கிடையாது. இதற்கும், அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது ஒரு வைரஸ் என்றார்.

மேலும், மருத்துவ ஆலோசனைப்படி, ஆஸ்திரேலியர்களை காக்கும் நோக்கில்தான் இந்த பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா தொற்றால் தினமும் சராசரியாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வரும் இந்தியாவில், தற்போது 9,000 ஆஸ்திரேலியர்கள் இருப்பதாகவும், இவர்களில் 600 பேர் பலவீனமானவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

eight + 13 =