டயானாவுக்கு தீமை செய்ய நினைக்கவில்லை

 

முன்னாள் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர் பேட்டி

 

மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவுக்கு தான் ஒருபோதும் தீங்கிழைக்க நினைக்கவில்லை என்று முன்னாள் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர் தெரிவித்திருக்கிறார்.

இளவரசி டயானா கார் விபத்தில் அகால மரணமடைந்ததற்கு அவரை அச்சுறுத்தி பேட்டி கண்ட பிபிசி முன்னாள் நிருபர் மார்ட்டின் பஷீர் தான் காரணம் என்றும், இதற்கும் பிபிசி செய்தி நிறுவனத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் டயானா மகன்கள் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றச்சாட்டை முன்வைத்தது பிரிட்டனில் புயலை கிளப்பியிருக்கிறது.

பரபரப்பான இந்த சூழலில், டயானா மரணமடைந்த காலகட்டத்தில் பிபிசி இயக்குநர் ஜெனரலாக இருந்த லார்டு ஹால் பெயரும் அடிபட்டதால், அவர் தற்போது வகிக்கும் தேசிய கேலரி (கலைக்கூடம்) பொறுப்பை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், முன்னாள் பிபிசி நிருபர் மார்ட்டின் பஷீர் சண்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

 

முதலாவதாக டயானாவின் மகன்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும், டயானாவும் மிகவும் நெருக்கமானவர்கள். நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். 1990களின் ஆரம்ப காலகட்டத்தில் டயானாவை சுற்றி ஏராளமான கதைகள் புனையப்பட்டன. தொலைபேசி அழைப்புகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டன. இதில், எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.

நான் அவரை பேட்டி கண்டது குறித்தோ, பேட்டியில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்தோ டயானா எந்தவித அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. அந்த நிகழ்வுக்கு பிறகும் கூட நாங்கள் தோழமையுடன் இருந்தோம். எனக்கு 3ஆவது பிள்ளை பிறந்தபோது கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது மனைவியை பார்ப்பதற்காக டயானா வந்திருந்தார். பேட்டியில் அவர் விரும்பிய விஷயங்கள்தான் இடம்பெற்றன. பேட்டியின் விவரங்களையும், அதை ஒளிபரப்ப வேண்டிய நேரத்தையும் கூட அவரே தீர்மானித்தார் என்றார் மார்ட்டின் பஷீர்.

Add your comment

Your email address will not be published.

eight − 7 =