முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவிய வூஹான் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது!

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, வூஹானில் பெயர் வைக்கப்படாத ஒரு புதிய வைரஸால் ஏற்பட்ட முதல் மரணத்தை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சீனாவிலிருந்து படிப்படியாக கோவிட் -19 உலகம் முழுவதும் 1.9 மில்லியன் உயிர்களை இதுவரை கொன்றுள்ளது. கடந்த ஆண்டு முதன்முதலில் மத்திய சீன நகரமான வூஹானில் 11 மில்லியன் மக்கள் தொகையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது, கடுமையான கட்டுப்பாடுகளுடன் வைரஸ் சீக்கிரமே கட்டுப்படுத்தப்பட்டு பின் வைரஸ் அகற்றப்பட்டது.

இப்போதும் வூஹானில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கொரோனா பாதிப்புகள் எழுகின்றது. ஆனால் மற்ற நாடுகளை விட வூஹான் நகரம் எவ்வளவோ பரவாயில்லை. அரசும், அதிகாரிகளும் கொரோனா பரவலுக்கு பலத்த கட்டுப்பாடுகளை விதித்து வைரஸை கட்டுப்படுத்தியுள்ளனர். பாதிப்புகள் மிக மிக குறைவாக உள்ளதால் வூஹானில் மக்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பார்க்குகளிலும் ஆற்றங்கரையிலும் காதலர்கள் எவ்வித அச்சமும் இன்றி சுற்றிவருகின்றனர். ஆனால் இந்த நிலை ஒருவருடத்திற்கு முன்பு இப்படி இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி 11 ம் தேதி வெளியான ஒரு அறிக்கையில், அறியப்படாத வைரஸிலிருந்து (கொரோனா) சீனா தனது முதல் மரணத்தை உறுதிப்படுத்தியது.

எங்கு பார்த்தாலும் கூட்டம், துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான வூஹான் சந்தையில் 61 வயதான ஒரு நபர், நார்மலாக சுற்றி வந்துள்ளார். அந்த நபரைத் தான் கொரோனா முதலில் தாக்கியுள்ளது. மேலும் அவர் கோவிட் -19/கொரோனா வைரஸா ல் இறந்துள்ளார் என்று உலகம் தெரிந்துகொண்டது. வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் பெயர் உட்பட, எந்த தகவலும் முதலில் யாருக்கும் தெரியாது. அவரின் இறப்பிற்கு பின்பு பாதிப்பு தொடருமோ என்ற அச்சத்தில் அந்த வூஹான் சந்தை முற்றிலும் மூடப்பட்டது. இந்த தகவலை அரசும் அதிகாரிகளும் முதலில் மூடிமறைக்க முயன்றதாக பல சந்தேகங்கள் எழுந்தன.

பல நாடுகள் சீனாவிற்கு ஒருவித அழுத்தத்தை மறைமுகமாகவும், நேரிடையாகவும் அளித்தது. இதுகுறித்து விசாரிக்க UNOன் ஸ்பெஷல் டீம் சீனாவிற்கு செல்ல திட்டமிட்டது, ஆனால இதற்கு பலமுறை சீன அனுமதி மறுத்தது. பல நீண்ட நாட்களுக்குப் பிறகு, சீனா திங்களன்று WHO இன் சுயாதீன வல்லுநர்கள் (Independent Experts) வியாழக்கிழமை முதல் வூஹானை பார்வையிடலாம் என்று கூறியது. UNO வின் சர்வதேச சமூகம் (international community) கொரோனா உருவான வூஹான் சந்தைக்குச் சென்று அங்கு வைரஸின் ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தது என்பதை பற்றி அலசி ஆராயும் என்று நம்பப்படுகிறது.

“வூஹான் இப்போது சீனாவின் பாதுகாப்பான நகரம், ஏன் உலகம் முழுவதும் கூட” என்று 66 வயதான சியோங் லியான்ஷெங் (Xiong Liansheng) திங்களன்று AFP இடம் கூறினார். பயணிகள் ஆற்றங்கரையில் உலா வருவதும் மற்றவர்கள் தங்களின் அன்றாட வேலைக்குத் திரும்புவதுமாக இருக்கின்றனர். வூஹானின் தற்போதைய நிலை மற்ற நாடுகளை விட முற்றிலும் மாறுபட்டது. உதாரணமாக சில நாடுகளில் இன்னமும் கடுமையான ஊரடங்குகளும் கட்டுப்பாடுகளும் உள்ளது. “தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த வூஹான் மக்களுக்கு விழிப்புணர்வு மிக அதிகம். என் இரண்டு வயது பேரன் கூட வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்துகொண்டுதான் செல்வான்” என்று சியோங் கூறினார்.