இந்தியாவின் நலனில் அமெரிக்காவுக்கு அதீத அக்கறை

துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இந்தியாவின் நலன் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

கரோனா இரண்டாம் அலையால் கடும் பாதிப்பை சந்தித்துவரும் இந்தியாவுக்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்க வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், குரல் பதிவின் மூலம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசியது:
எனது பரம்பரை இந்தியாவை பூர்வீகமாக கொண்டது என்பது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நன்றாக தெரியும். எனது தாயார் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். இப்போதுகூட இந்தியாவில் எனக்கு குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் நலம் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிப்பும், அதனால் நிகழும் மரணங்களும் இதயத்தை நொறுக்குகின்றன. இந்தியாவில் நிலவும் கடுமையான சூழல் வெளியுலகுக்கு தெரிய வந்த உடனேயே அமெரிக்கா ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டியது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த ஏப்ரல் 26இல் இந்திய பிரதமர் மோடியை தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்தார். ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் என்95 முக கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அமெரிக்காவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், நிவாரணப் பொருள்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இந்தியாவும், பிற நாடுகளும் தங்களது நாட்டு மக்களுக்கு துரிதமாக தடுப்பூசி செலுத்தும் பொருட்டு, கரோனா தடுப்பூசிகள் மீதான காப்புரிமையையும் நாம் ரத்து செய்திருக்கிறோம். பெருந்தொற்றின் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா கடுமையான சோதனையை சந்தித்தபோது, இந்தியா உதவியது. இன்றைக்கு நாமும் இந்தியாவுக்கு உதவி வருகிறோம். இந்தியாவின் நட்பு நாடாக, ஆசிய குவாட் உறுப்பு நாடாக, சர்வதேச சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் உதவி வருகிறோம் என்றார் அவர்.
முன்னதாக கரோனா தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்து உரிமையை தற்காலிகமாக கைவிடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

15 + seven =