குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: 16 பேர் பலி

 

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் திடீரென நேரிட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் என 16 பேர் உடல் கருகி சனிக்கிழமை அதிகாலை பலியாகினர்.

பரூச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டட மருத்துவமனையில், 50 கரோனா நோயாளிகள் உள்பட70 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், 14 நோயாளிகள், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் என 16 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டும், உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கூடுதல் தலைமை செயலாளர் விபுல் மித்ரா, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் ஆகியோருக்கு முதல்வர் உத்தரவிட்டார். நீதி விசாரணை நடத்துவது குறித்தும் குஜராத் மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த வாரம் ஏற்கெனவே சூரத்தில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். இதேபோல், கடந்த ஆண்டு ஆமதாபாத் மருத்துவமனையில் நடைபெற்ற தீ விபத்தில் 8 பேரும், ராஜ்கோட் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேரும் பலியாகினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குஜராத்தில் மற்றொரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

18 − 14 =