கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரத்தை சேகரியுங்கள்

அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரத்தை சேகரித்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதால், அது குழந்தைகளையும், இளைஞர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ஆகையால் நாம் இன்னமும் ஆயத்தமாக இருக்க வேண்டும். எனவே ஒவ்வோர் அதிகாரியும் தங்கள் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், குழந்தைகளின் விவரத்தை சேகரிக்க வேண்டும்.
தடுப்பூசிகள் வீணாவதாகவும் செய்திகள் வருகின்றன. தடுப்பூசிகள் உங்களுக்கு விநியோகிக்கப்பட்டதும், அது வீணாகக் கூடாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதை நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தீவிரமாக கண்காணியுங்கள். தடுப்பூசிகள் வீணாவதை தடுப்பது முக்கியம். ஏனெனில், ஒவ்வொரு தடுப்பூசியும் வீணாவதன் மூலம் ஒருவருக்கான பாதுகாப்பை நாம் இழக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கரோனா வைரஸ் என்பது கண்ணுக்கு புலனாகாதது. அது அடிக்கடி உருமாற்றம் அடையக் கூடியது. எனவே நமது அணுகுமுறையும் மேம்பட்டதாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் உங்கள் பணியை மேலும் சவாலானதாக மாற்றிவிட்டது. இந்த புதிய சவாலுக்கு மத்தியில், நமக்கு புதிய வியூகமும், தீர்வும் தேவை. உள்ளூர் அளவிலான அனுபவங்களை பயன்படுத்தி, ஒரே தேசமாக நாம் சேவையாற்றுவோம் என்றார் மோடி.

Add your comment

Your email address will not be published.

2 × 5 =