அன்று ஜார்ஜ் பிளாய்டு… இன்று சாஷா ஜான்சன்…

 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி மின்னிசொட்டா மாகாணத்தின் மினபொலீஸ் பகுதியில், ஆப்பிரிக்க அமெரிக்கரான 46 வயது ஜார்ஜ் பிளாய்டு, இன வெறிபிடித்த காவலரால் கொடூரமாக கொல்லப்பட்ட சுவடுகள் இன்றும் மறையவில்லை. கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், ஜார்ஜ் பிளாய்டை கைது செய்த டெரிக் சாவின் என்ற அந்தக் காவலர், பிளாய்டின் கழுத்தில் தனது காலால் ஈவு இரக்கமின்றி துள்ள துடிக்க அழுத்தினார்.

இதனால், ஜார்ஜ் பிளாய்டு மூச்சுவிட சிரமப்பட்டு, ‘ஐ கான்ட் பிரீத்’ (என்னால் மூச்சுவிட முடியவில்லை) என்று கதறிய வீடியோ காட்சிகள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 9 நிமிடங்கள் 29 நொடியில் ஜார்ஜ் பிளாய்டின் மூச்சும் அடங்கியது. இந்த நிகழ்வை கண்டித்து அமெரிக்காவில் கருப்பின மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், ஐக்கிய நாடுகளே குலுங்கின.
அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததில், ஜார்ஜ் பிளாய்டு விவகாரத்தை அவர் கையாண்ட விதமும் ஒரு காரணியாக சொல்லப்பட்டது. இவ்வாறு ஆட்சி மாற்றத்துக்கே வித்திட்டிருக்கிறது அபயக் குரல்…

ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட ஓராண்டுகள் கழித்து, தற்போது லண்டனிலும் இதற்கு சற்றும் தளராத ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது கருப்பின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘பயமறியா அரசியல் பிரசாரகர்’ என்று அறியப்படும் கருப்பினத்தை சேர்ந்த 27 வயது சாஷா ஜான்சன், கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி குண்டுகள் தலையில் பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருப்பின உரிமை போராளியான அவர், இன எதிர்ப்பு போராட்டங்களை முன்நின்று நடத்தியதாலும், அரசியல் கருத்துகளை துணிந்து தெரிவித்து வந்ததாலும் கடந்த ஆண்டில் புகழ் வெளிச்சம் பெற தொடங்கினார். மேலும், ஜார்ஜ் பிளாய்டு படுகொலையை எதிர்த்து கடந்த ஆண்டு லண்டனில் ‘கருப்பின மக்களின் உயிரும் முக்கியமே’ (பிளாக் லிவ்ஸ் மேட்டர்) என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் சாஷா முனைப்புடன் பங்கேற்றார்.
இதுமட்டுமன்றி, பிரிட்டனில் கருப்பின மக்களின் உரிமைகளை நிலைநாட்ட கோரி நடைபெற்ற போராட்டங்களையும் சாஷா ஒருங்கிணைத்தது அவரது அரசியல் எதிரிகளுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமைந்தது.

பிரிட்டனில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கடந்த ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘டேகிங் தி இனிஷியேடிவ் பார்ட்டி’ எனும் கட்சி தலைவர்களில் ஒருவராகவும் சாஷா உயர்ந்தார். இக்கட்சி சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக தேர்தல்களம் பூண்டது, சாஷா எதிராளிகளின் சீற்றத்தை மேலும் தூண்டியது. பிரிட்டனில் கருப்பின மக்களால் நிர்வகிக்கப்படும் முதல் கட்சி இது என்பதுதான் இதற்கு பிரதான காரணம். ஆனாலும், தங்கள் கட்சி கருப்பின மக்களுக்கு மட்டுமன்றி, தொழிலாளர் வர்க்கத்தின் உயர்வுக்கும் பாடுபடும் என்று சாஷா ஜான்சன் பிரசாரத்தின்போது சூளுரைத்தார்.
கூட்டுத் தலைமையை பின்பற்றும் அக்கட்சியின் நிர்வாகக் குழுவில் சாஷா உள்ளிட்ட 8 தலைவர்கள் இருக்கின்றனர். அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சாஷாவை பற்றி குறிப்பிடுகையில், ”அவரது கருத்துக்கு எல்லோரும் உடன்படாமல் இருக்கலாம். ஆனால், அவர் நம்பும் ஒரு கருத்தை அச்சமின்றி முன்வைப்பதில் தேர்ந்தவர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாஷா ஓர் அரசியல்வாதியாக, கருப்பின களப் போராளியாக மட்டுமன்றி, சமூக சேவையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு, உணவு மற்றும் மளிகை பொருள்களை தனிப்பட்ட முறையில் வழங்கி, அவர்களின் துயர்துடைத்திருக்கிறார். அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆண்டாண்டு காலமாக அடிமைத்தளையில் சிக்கித் தவித்த கருப்பின மக்களுக்கு வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் அடிமைத்தனத்தை பிரதிபலிக்கும் சிலைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டுமென தனது மனக்குமுறல்களை தெரிவித்திருந்தார்.
பிரமாண்ட பேரணிகளையும், பொதுக்கூட்டங்களையும் ஊக்குவித்து சமூகத்தில் நிலவும் அநீதிகளை வேரறுப்பதையே உயிர்மூச்சாக கொண்ட அவர், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் நலம்பெற பிரார்த்திப்போம்…

Add your comment

Your email address will not be published.

four + 14 =