வெள்ளி நாணயம் இருந்தால் பிரிஸ்டல் ஓல்ட் விக் திரையரங்கில் வாழ்நாள் முழுவதும் திரைப்படம் இலவசம்
பிரிட்டனின் பழமையான தியேட்டர் நிறுவனமான பிரிஸ்டல் ஓல்ட் விக், தங்களது நூற்றாண்டு கால கொள்கைக்கு மரியாதை அளிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட வெள்ளி நாணயம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு இந்த திரையரங்கில் நடைபெறும் ஒவ்வொரு காட்சிக்கும் இலவச டிக்கெட் தரப்படும்.
இந்த நாணயத்தை பயன்படுத்தி அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் இந்த திரையரங்கில் இலவசமாக படம் பார்த்துக் கொள்ளலாம். 1766 ஆம் ஆண்டு
தேதியிட்ட இந்த நாணயங்கள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளது. தொடக்க காலத்தில் ராயல் தியேட்டர் என அழைக்கப்பட்ட பிரிஸ்டல் ஓல்ட் விக் திரையரங்கம், 1764 மற்றும் 1766 காலத்தில் கட்டப்பட்டது. திரையரங்கின்
உண்மையான பங்குதாரர்களுக்கு வழங்குவதற்காக 1766 ஆம் ஆண்டு 50 வெள்ளி நாணயங்கள் அச்சிடப்பட்டன.
இந்த 50 பங்குதாரர்களும் திரையரங்கம் கட்டுவதற்காக தனித்தனியாக இந்திய மதிப்பில் ரூ.5,055 கொடுத்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் இது மிகப்பெரிய தொகையாகும். திரையரங்கின் கட்டுமானத்திற்கு உதவியதற்காக இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. இதை வைத்து இந்த திரையரங்கில் நிகழ்த்தப்படும் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
மதிப்புமிக்க இந்த 50 வெள்ளி நாணயங்களும் தற்போது ஏலம் விடப்படவுள்ளது. எப்படியும் ஒவ்வொரு நாணயமும் ரூ.1.51 லட்சம் முதல் ரூ.2.52 லட்சம் வரையில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாணயங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் எங்கள் திரையரங்கின் கொள்கையின்படி, இதை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு காட்சிக்கும் நாங்கள் இலவச டிக்கெட் கொடுப்போம் என பிரிஸ்டல் ஓல்ட் விக் திரையரங்கம் கூறியுள்ளது.