ஒவ்வொரு 10 நிமிடமும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவளிக்கும் அறக்கட்டளை

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் தி டிரஸ்ஸல் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் உணவுப் பூங்காக்கள், கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து மனிதநேயத்தை நிலைநாட்டி வருகிறது.
தானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால், கொரோனா பொது முடக்க காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து, வாழ்வாதாரத்துக்காக பரிதவிக்க நேர்ந்தது. அதிலும், ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள் சொல்லொணா துயரத்துக்குள்ளாகினர்.

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் ஒருவேளை சாப்பாடுக்கு கூட கஷ்டப்பட்ட எண்ணற்ற நபர்களுக்கு ஓசையின்றி உதவிக்கரம் நீட்டி வருகிறது தி டிரஸ்ஸல் அறக்கட்டளை.
வேல்ஸ் மாகாணம் முழுவதும் சுமார் 125 உணவு விநியோக மையங்களுடன் செயல்பட்டுவரும் இந்த அறக்கட்டளை, ஆதரவற்றவர்களை சந்தித்து அவர்களுக்கான உணவு தேவையை செவ்வென பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 54 ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவற்ற சிறுவர்களின் பசிப்பிணி போக்கியுள்ளது.

சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடமும் ஒரு சிறுவனுக்கு இந்த அறக்கட்டளை அன்னம்பாலிக்கிறது. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 1,45,828 பேருக்கு இந்த அறக்கட்டளையின் உணவுப்பூங்கா வாயிலாக உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8 சதவீதமும், கடந்த 2015}16ஆம் ஆண்டை காட்டிலும் 69 சதவீதம் அதிகம் என்று வேல்ஸ் உணவு பூங்கா மேலாளர் சூசன் லிலாய்டு தெரிவித்துள்ளார்.
பசியின் கொடுமையை யாரும் உணர கூடாது என்பதை மையக் கருவாக கொண்டு தாங்கள் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், பொது முடக்க காலத்தில் தாங்கள் விநியோகித்த உணவு பொட்டலம் ஒருவருக்கு 7 நாள்கள் வரை பசியாற்றிதாகவும் தெரிவித்தார்.
மேலும், மே மாதம் நடைபெறவுள்ள செனட் சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், உணவுப் பூங்காவின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இதற்காக பொதுமக்களும் முயற்சி எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

5 × 2 =