கரோனா வைரஸை சில மணிநேரத்தில் அழிக்கும் மருந்து

முதல்கட்ட சோதனை நிறைவடைகிறது

கரோனா வைரஸை சில மணி நேரத்தில் அழித்து, வருங்காலத்தில் பொதுமுடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருந்து குறித்து பிரிட்டனில் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இந்த மருந்தின் முதல்கட்ட சோதனை மே மாத இறுதியில் நிறைவுபெற உள்ளது. இந்த மருந்தின் தாக்கம் குறித்த பரந்த அளவிலான சோதனை அதன்பின்னர் நடைபெற இருக்கிறது.
ஃபவிபிரவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து, வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைத்து, தென் ஆப்பிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கத்தைக் கூட மட்டுப்படுத்தும் வல்லமை மிக்கது.
இதுகுறித்து தலைமை ஆய்வாளரும், கிளாஸ்கோவ் பல்கலைக்கழக பேராசிரியருமான கெவின் பிலித் கூறியது:
இந்த மருந்து மட்டும் சோதனையில் வெற்றியடைந்து விட்டால், அது மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்படும். மேலும், இந்த மருந்தை உட்கொண்டால், உங்களுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இயல்புநிலைக்கு அனைவரும் திரும்பிவிடலாம். பொதுமுடக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடாது.
கொவிட் சோதனையில் பாசிடிவ் என முடிவு வந்தவர்கள், இந்த மருந்தை எடுத்துக் கொண்டால், அடுத்த சில தினங்களிலேயே உடலில் கரோனா வைரஸை செயலிழக்கச் செய்துவிடலாம். நிச்சயமாக, அடுத்த 6 மாதங்களில் அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் பதிலளிக்க முடியும் என்றார் அவர்.

ஃபவிபிரவர் மருந்து குறித்து லண்டனில் தனிப்பட்ட சோதனை நடைபெற்று வருவதால், கிளாஸ்கோவில் கரோனா பாதிப்புக்குள்ளான தன்னார்வலர்கள், ரிசல்ட் வந்தவுடனேயே தங்களை அணுகி, இந்த மருந்தின் சோதனைக்கு உதவிடுமாறு நிபுணர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனிடையே, தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டுவரும் பைஸர் நிறுவன மாத்திரைகள் இந்த ஆண்டு இறுதிவரை தேவையான அளவுக்கு பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் எதிர்ப்பு மாத்திரையான பைஸர், கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுவதில் இருந்து பொதுமக்களை காக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

17 − sixteen =