லண்டனில் இன்று கூடுகிறது ஜி7 மாநாடு

 

 

உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக திகழும் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கூடி, சர்வதேச நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச தலைவர்கள் சந்திக்க இருப்பதால், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

மேலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து சர்வதேச சட்டங்களைக் காப்பதற்கான வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மரில் ஜனநாயக அரசை கவிழ்த்து ராணுவம் தன்னிச்சையாக ஆட்சியமைத்தது, ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் உடனான பிரிட்டனின் உறவுகள் மீதான விவாதத்துக்கு பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டொமினிக் ராப் தலைமை வகிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்பை ஜி7 மாநாடு அளித்திருக்கிறது என்றார்.

உலகின் சிறந்த பொருளாதார சக்திகளாக விளங்கும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி7 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. இந்திய- பசிபிக் பிராந்தியத்தில் பிரிட்டன் தனது செல்வாக்கை வலுப்படுத்த விரும்புவதால், 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றன.

Add your comment

Your email address will not be published.

nineteen − 10 =