தேர்தலில் வென்றும் பதவி ஏற்க இயலாத கன்சர்வேடிவ் வேட்பாளர்

 

30 ஆண்டுக்கு முந்தைய வழக்கு காலை வாரியது 

 

இங்கிலாந்தின் ஸ்வின்டன் மற்றும் வில்ட்ஸர் போலீஸ் குற்ற கமிஷனர் தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜோனதான் சீட், அந்த பதவியை வகிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது பதிவான வழக்கின் காரணமாக இந்த பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், இந்த இடத்துக்கு மட்டும் மறுதேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் 1,00,003 வாக்குகள் பெற்று ஜோனதான் வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த 1993ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்தின்கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், அவர் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கக்கூடிய பிரிவின்கீழ் வழக்குகளை எதிர்கொண்ட வேட்பாளர்கள், போலீஸ் குற்ற கமிஷனர் தேர்தலில் போட்டியிட கூடாது என்பது விதிமுறை. இதையும் மீறி ஜோனதான் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் களம் கண்டது போலீசாருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் போலீசார் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

 

இதுகுறித்து கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜோனதான் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு நான் தேர்தலில் போட்டியிட தடை ஏற்படுத்தாது என்று எனது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மே 6ஆம் தேதிவரை இவ்வாறு கூறி கட்சியினர் எனக்கு நம்பிக்கை அளித்தனர். இதனால் தான் வேட்புமனு தாக்கல் செய்தேன் என்றார். மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் இமெயிலும் ஜோனதான் அனுப்பியிருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

seventeen − five =