ஆக்சிஜன் தட்டுப்பாடு போட்டி போட்டு உதவும் பெரு நிறுவனங்கள்!

 

இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு உதவ தனியார் பெருநிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்திருக்கின்றன.
உதாரணமாக, திரவ ஆக்சிஜனை சிறப்பு விமானங்கள் வாயிலாக கொண்டு செல்ல 24 கிரையோஜெனிக் கன்டெய்னர்களை இறக்குமதி செய்யப் போவதாக டாடா குழுமம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் சுகாதார கட்டமைப்புக்கு உதவுவதில் நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அந்நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறது.
இது தவிர டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனமும் தன்னாலான பங்கை அளித்துவருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் குறிப்பிடுகையில், “”கரோனா சிகிச்சையில் மருத்துவ ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது. தேசிய அவசரநிலை கருதி, பல்வேறு மாநில அரசுகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் தினந்தோறும் 200}300 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை நாங்கள் சப்ளை செய்து வருகிறோம்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மாற்றி அமைத்து, நாள்தோறும் 700 டன் மருத்துவ தர ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்கிறது. இதே ஜாம்நகர் ஆலையில், முதலில் 100 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது 700 டன் உற்பத்தியாகிறது. இதை 1000 டன் என்ற அளவில் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதேபோல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனமும் கர்நாடகம் (பெல்லாரி), மகாராஷ்டிரா (டோல்வி), தமிழ்நாடு (சேலம்) ஆகிய மாநிலங்களில் தனக்கு உள்ள மூன்று ஆலைகளை பயன்படுத்தி, தினந்தோறும் 600 டன் ஆக்சிஜன் தயாரித்து விநியோகிக்க திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே, டோல்வி ஆலை வாயிலாக 185 டன் ஆக்சிஜன் விநியோகித்து வருவதாக அந்நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
இந்த நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் வினோத் நோவல், கர்நாடக சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் ஆர். நிராணியை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து, மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தி, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தினமும் 400 டன் ஆக்சிஜன் தருவதாக உறுதியளித்தார்.

இதேபோல், ராஷ்டிரீய இஸ்பாட் நிகாம் லிட் (விசாக் ஸ்டீல் ஆலை) நிறுவனமும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை விநியோகித்து கரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆக்சிஜனை தரம்பிரிக்கும் 5 ஆலைகள் உள்ளன. அதில், மூன்று ஆலைகள் தினமும் 500 டன் ஆக்சிஜனும், மீதமுள்ள இரண்டு ஆலைகளும் 600 டன் ஆக்சிஜனும் உற்பத்தி செய்யும் திறன்வாய்ந்தவை.
மேலும், இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2,600 டன் ஆக்சிஜனை வாயு வடிவிலும், 1000 டன் ஆக்சிஜனை திரவ வடிவிலும் உற்பத்தி செய்யும் வல்லமைவாய்ந்தது. இதில், திரவ வடிவிலான ஆக்சிஜன்தான் கடந்த சில தினங்களாக மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வருகிறது.

வேதாந்தா நிறுவனம்:
தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வாயிலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்து மருத்துவத் துறைக்கு கரம்கொடுக்க வேதாந்தா நிறுவனமும் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கும் அந்நிறுவனம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையில் நாளொன்றுக்கு 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்வாய்ந்த இரண்டு ஆலைகள் இருப்பதாகவும், அதை மருத்துவ நோக்கத்துக்காக இயக்கி, நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்கிற நிலையை உறுதி செய்ய உதவுவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் அதில் அந்நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசின் உத்தரவு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

two × four =