இந்தியாவுக்கு விரோதமாக கரோனாவை ஆயுதமாக பயன்படுத்தும் சீனா

 

இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடுகளில், கரோனாவை ஆயுதமாக பயன்படுத்தி சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

உலக மக்கள் தொகையில் பெரும் பகுதி அதாவது 250 கோடிக்கும் மேற்பட்டோர் சீனா, இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் தான் வசிக்கின்றனர். கரோனா வைரஸ் எனும் தீநுண்மியால் இந்தியாவும், அதன் அண்டை நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு கரோனா தடுப்பூசிகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் ஏற்றுமதி செய்து, அங்கு தனது ஆதிக்கத்தை ஆணித்தரமாக பதிவுசெய்கிறது சீனா.

ஏற்கெனவே இலங்கையின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் சீனா முதலீடு செய்திருப்பதால், இலங்கை ஒருவேளை சீனாவுக்கு விற்கப்பட்டுவிட்டதோ என்றுகூட அந்நாட்டு மக்கள் உணருவதாக செய்திகள் வெளியாகின. இதுமட்டுமன்றி, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் சீன நிதியுதவியாலும், அந்நாட்டை சேர்ந்த நிறுவனத்தாலும் கட்டப்பட்டது. அந்தக் கடனை கூட இலங்கையால் திருப்பி செலுத்த இயலாததால், அம்பன்தோட்டா துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

ஏற்கெனவே வர்த்தகம், எல்லை பிரச்னை என பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, கரோனாவை நல்வாய்ப்பாக பயன்படுத்தி, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றில் தனது இருப்பை வலுவாக பதிவு செய்கிறது.

இலங்கையில் கடந்த மாதங்களைக் காட்டிலும் தற்போது 1000சி சதவீதம் அதிகமாக தினமும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்வதில் இலங்கையின் சுகாதாரத் துறை ஸ்தம்பிப்பதால், சீனா ஆதரவுக் கரம் என்ற பெயரில், இலங்கையை நோக்கி அடுத்த வலையை வீச தொடங்கியிருக்கிறது. அதன்படி, இலங்கைக்கு கரோனா கவச உடைகள் (பிபிஇ கிட்ஸ்), முகக்கவசங்கள், பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை சீனா இலவசமாக அனுப்பிவைத்திருக்கிறது. இதுமட்டுமன்றி, இலங்கையின் தடுப்பூசி திட்டம் தடையில்லாமல் தொடர சினோபார்ம் என்கிற தடுப்பூசியையும் 11 லட்சம் எண்ணிக்கையில் சீனா அனுப்பிவைத்தது. இதன்மூலம் சீனாவின் கரங்களுக்குள் இலங்கை பலமாக சிக்கிக் கொண்டதாக கொள்கை நிபுணர்கள் விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர்.

 

இதுகுறித்து இலங்கையை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அசங்கா அபயகுணசேகரா கூறுகையில், இலங்கைத் தீவில் உள்ள சீனாவின் உள்கட்டமைப்புகளுக்கு மற்றொரு மைல்கல்லாக சீனாவின் தடுப்பூசி ராஜதந்திரம் விளங்குகிறது. இதன்மூலம் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மேலும் உயரும் என்றார்.

டாக்டர் ரண்ணன் எலியா கூறும்போது, இலங்கைக்கு தேவைப்படும் அளவு தடுப்பூசிகளை விநியோகிப்பதிலும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியதிலும் சீனா சிறந்து விளங்குவதால், அந்நாட்டின் உதவியை இலங்கை நாடுகிறது. ஆனாலும், சீனாவை நாம் தீவிரமாக கருதாதது மிகப்பெரிய தவறு. ராஜதந்திரத்தில் பிரிட்டனை நாம் பின்பற்றுகிறோம். ஆனால், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளை உற்றுநோக்கினால், பிரிட்டனே சீனாவைதான் தனது ராஜதந்திர முன்மாதிரியாக கருதுவது தெரியவரும் என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

3 × five =