மருத்துவமனையில் திருமண நாளை கொண்டாடிய தம்பதி!

கரோனா பாதித்தவர்கள்

இங்கிலாந்தில் கரோனா தொற்றுக்குள்ளான தம்பதி, தங்கள் 8ஆவது திருமண நாளை மருத்துவமனையில் ஒன்றாக கொண்டாடினர்.

வடகிழக்கு இங்கிலாந்தின் டைன் அன்ட் வியர் மெட்ரோபாலிடன் நகரை சேர்ந்த பீட்டர் (67), ஷேலா (58) தம்பதி கரோனா பாதிப்புக்குள்ளாகி, சுந்தர்லேண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 நாள்களாக தொடர்ச்சியான சளி, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், பீட்டர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கரோனா உறுதியானது.
இதேபோல, அவரது மனைவிக்கும் அறிகுறி ஏற்பட்டு, பேசுவதற்கே சிரமம் ஏற்பட்டதால், 5 நாள்கள் இடைவெளியில் அவரும் அதே மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் 3 நாள்கள் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கே ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஷேலா, சிகிச்சையின் மூலம் உடல் நலம் தேறினார்.
இந்தத் தம்பதியின் 8ஆவது திருமண நாள் அடுத்த சில தினங்களில் வர போவதை அறிந்த மருத்துவமனை வார்டு மேலாளர், தம்பதி இருவரும் அதை ஒன்றாக கொண்டாட ஏற்பாடு செய்தார். அதன்படி, இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, இருவரும் குணமடைந்ததால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் கரகோசத்துடன் அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து ஷேலா குறிப்பிடுகையில், மருத்துவமனையில் திருமண நாளை கொண்டாடியது மிகவும் உணர்வுபூர்வமானது. நாங்கள் இருவரும் ஒன்றாக, அதிலும் உயிரோடு இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
பீட்டர் கூறும்போது, நாங்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளியே வருவோம் என்று நினைக்கவில்லை. அந்த அளவுக்கு கரோனாவின் பாதிப்பு கடுமையாக இருந்தது. மருத்துவமனை தோட்டத்தில் அமர்ந்து, சூரிய ஒளியை ரசித்த நாங்கள், அதன்பின்னர் இவ்வாறு ரசிக்க உயிரோடு இருப்போம் என்று நினைக்கவில்லை. எங்களுக்கு சிறப்பாக சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி என்றார்.

Add your comment

Your email address will not be published.

six + fourteen =