ஆபத்தான காலகட்டத்தில் இந்தியாவுக்கு துணைநிற்கும் பிரிட்டன்!

கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருக்கும் இந்தியாவுக்கு பிரிட்டன் அனுப்பிவைத்த 200 மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை டெல்லியை சென்றடைந்தன. அதை விமானத்திலிருந்து இறக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்நாடியாக திகழும் பிராணவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்கும் வகையில், வென்டிலேட்டர் மற்றும் காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் கான்சென்ட்ரேட்டர் என 200 கருவிகளை பிரிட்டன் விமானத்தில் அனுப்பிவைத்தது. இந்த விமானம் செவ்வாய்க்கிழமை டெல்லியை அடைந்தது.
இந்தியாவில் திங்கள்கிழமை 3,20,000 பேருக்கு கரோனா உறுதியானதால், மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தெருக்களில் தஞ்சம்புகுந்து, மருத்துவமனைகளில் படுக்கைக்காக காத்திருக்கின்றனர். இந்த கடினமான சூழலில் பிரிட்டன் மட்டுமன்றி அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன்வந்திருக்கின்றன.
வெளிநாடுகள் அளிக்கும் மருத்துவ உபகரணங்கள் யாவும் கடலில் பெய்த சிறுதுளிக்கு ஒப்பாகும் எனக் கூறிய மும்பை மருத்துவரும், அரசு ஆலோசகருமான ஜரீர் உத்வாடியா, இவை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

eight − one =