சகஜமாக மூச்சு விடுங்கள் கோடையில் மாஸ்க் தேவைப்படாது

விஞ்ஞானிகள் நம்பிக்கை

பிரிட்டனில் கரோனா தடுப்பூசிகளின் செயல்திறனால், நோய்த்தொற்று பரவல் வீதம் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்றும், இதனால் மாஸ்க் அணிய நேரிடாது என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் மே 17இல் வெளியிட இருக்கிறார். அன்றைய தினம் உணவகம், உள் அரங்குகளில் கட்டுப்பாடுகளின்றி கூடுவதற்கு அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஞ்ஞானிகளின் இந்த அறிவிப்பு காரணமாக ஜூன் 21ஆம் தேதிக்குள் பிரிட்டனில் இயல்பு நிலை திரும்பி, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் தடையின்றி கலந்து கொள்வதற்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

இதுகுறித்து பிரிட்டன் அரசின் அறிவியல் ஆலோசகர்களான விஞ்ஞானிகள் மேலும் கூறுகையில், கரோனா தடுப்பூசிகள் மிகவும் நல்ல முறையில் செயல்புரிகின்றன. இதை அதிகளவிலான பொதுமக்கள் செலுத்தி வருவதால், கோடை காலங்களில் இயல்பு நிலை திரும்ப சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒருவேளை குளிர்காலத்திலும், இலையுதிர் காலத்திலும் கரோனா தொற்று அதிகரித்தால், முகக் கவசங்களும், இன்ன பிற தடுப்பு நடவடிக்கைகளும் தேவைப்படலாம் என்றனர்.
ஏற்கெனவே, இலையுதிர் காலத்தில் கரோனா 3ஆம் அலை எழ வாய்ப்பிருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள், தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, கரோனா 3ஆம் அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தாது. குளிர்காலத்தில் கரோனா பரவல் மிதமாகவே இருக்கும். கரோனா தடுப்பூசிகள் நோய்த் தொற்று பரவலை 90 சதவீதம் கட்டுப்படுத்துவதால், பிரிட்டனில் பெருந்தொற்று அபாயம் இல்லை என்று கூறினர்.

பிரிட்டனில் தற்போது பைஸர், அஸ்ட்ராஜெனிகா, மாடர்னா என 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 3 கோடியே 33 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 1 கோடியே 11 லட்சம் பேர் இரு தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

seven + 4 =