பொம்மை காரின் உதவியுடன் தாயை காப்பாற்றிய 4 வயது சிறுவன்!

போலீஸ் அதிகாரிகள் பாராட்டு

பிரிட்டனில் பொம்மை காரின் உதவியுடன் தாயின் உயிரை காப்பாற்றிய 4 வயது சிறுவனுக்கு பாராட்டு குவிகிறது.

நாட்டிங்ஹாம் நகரை சேர்ந்த டிலாவர் மனைவி சர்லோட்டி கான் (வயது 25). இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். இத்தம்பதியின் 4 வயது மகன் ஈஷா. கடந்த சனிக்கிழமை டிலாவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றிருந்தார். மதிய உணவுக்குப் பின்னர் சர்லோட்டிகானுக்கு திடீரென வலிப்பு உண்டானது. இதனால், நிலைதடுமாறிய அவர், மீன்தொட்டியின் மீது மோதி, அப்படியே சரிந்து விழுந்து மயக்கமடைந்தார்.
தனது கண்களுக்கு முன்பாகவே தாயார் வலிப்புநோயால் அவதிப்படுவதை பார்த்த ஈஷா, அதிர்ச்சிக்குள்ளானான். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவன், தான் அடிக்கடி விளையாடும் போலீஸ் என்ற வாசகம் அடங்கிய பொம்மை காரில் பொறிக்கப்பட்டுள்ள 999 என்ற அவசர எண்ணை தாயாரின் செல்போன் வாயிலாக டயல் செய்தான்.

மறுமுனையில் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் கரகரத்த குரலில் பேசவே, ”அம்மா கீழே விழுந்துவிட்டார். உதவி உதவி” என்று தனது மழலைக் குரலில் கூப்பாடு போட்டான் ஈஷா. அவனது சங்கேத வார்த்தைகளை அறிந்த காவல் துறையினர், உடனடியாக இணையத்தில் சிறுவன் அழைத்த செல்போன் எண்ணின் முகவரியைக் கண்டறிந்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.
சிறுவனை வீட்டை அடைந்ததும், உள்ளே சென்ற காவல் துறையினர், செவிலியர்கள் மூலம் அவனது தாய்க்கு அங்கு வைத்தே சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து, சர்லோட்டி கான் கண்விழித்தார். தனக்கு முன்பாக காவல் துறையினரும், செவிலியரும் புடைசூழ நிற்பதை பார்த்த அவருக்கு, பின்னர்தான் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.
ஏற்றவேளையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து உதவி கோரிய தனது மகனை ஆறத்தழுவி அணைத்தார் சர்லோட்டி. இதுகுறித்து அவர் கூறியது;

நான் சரிந்து விழுந்ததும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட எனது மகன், ஏறத்தாழ 17 நிமிடங்கள் பேசியிருக்கிறான். அதில், ‘அம்மா விழுந்துவிட்டார்’ என்று திரும்ப திரும்ப கூறியிருக்கிறான். ஆபத்து வேளையில் புத்திக்கூர்மையுடன் செயல்பட்ட அவனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவன் மட்டும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால், எனது நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது என்றார்.
கட்டுப்பாட்டு அறை தலைவர் சூப்பிரண்ட் சுகேஷ் வர்மா கூறுகையில், ”சிறுவனின் தைரியமும், புத்திக்கூர்மையும் தான் எங்களை திறம்பட செயல்பட வைத்தது. இல்லையென்றால், எங்களால் ஏதும் செய்திருக்க முடியாது. எனவே, நாட்டிங்ஹாம் போலீஸ் சார்பில், அவனுக்கு மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Add your comment

Your email address will not be published.

16 + 2 =