இந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் வர்த்தக ஒப்பந்தம்

பிரமதர் போரிஸ் ஜான்சன்

 

இந்தியா- பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட் (ரூ. 10 ஆயிரம் கோடி) வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதில், பிரிட்டனில் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 533 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இந்திய முதலீடும் அடங்கும்.

மேலும், பிரிட்டனில் தடுப்பூசி வணிகத்தை மேற்கொள்வதற்காக இந்தியாவின் சீரம் மருந்து உற்பத்தி நிறுவனம் 240 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்வதையும் பிரமதர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் கடந்த மாதம் இந்தியா செல்வதாக இருந்தது. இந்நிலையில், அங்கு கரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியிருப்பதால், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக போரிஸ் ஜான்சனும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு முன்பாக அந்த முதலீட்டு அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார்.

இதுதொடர்பாக பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சீரம் நிறுவனத்தின் விற்பனை அலுவலகம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வர்த்தக வாய்ப்பை உருவாக்கும். இதில், 200 பில்லியன் டாலர் பிரிட்டனில் முதலீடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரம் நிறுவனம் ஏற்கெனவே அதன் முதல்கட்ட சோதனை பணிகளை பிரிட்டனின் கோடாஜெனிக்ஸ் ஐ.என்.சி. நிறுவனத்துடன் இணைந்து தொடங்கிவிட்டது.

மேலும், 446 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களை இந்தியாவுடன் பிரிட்டன் வணிக நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கின்றன. இதன்மூலம் பிரிட்டனில் கூடுதலாக 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

 

இதுமட்டுமன்றி பிரிட்டன் வழக்குரைஞர்கள் இந்தியாவில் சர்வதேச மற்றும் வெளிநாட்டு சட்டம் பயில்வதில் நிலவும் தடைகளை அகற்றுவதிலும் இரண்டு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. பிரிட்டன்- இந்திய வர்த்தக உறவை இரட்டிப்பாக்கி, இருநாட்டு உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

ten − nine =