தேம்ஸ் தீவு படகு குழாமில் பயங்கர தீ விபத்து

வரலாற்றுச் சிறப்புமிக்க படகு எரிந்தது

தென்மேற்கு லண்டனின் தேம்ஸ் தீவில் திங்கள்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், இரண்டு படகு குழாம்கள் எரிந்து நாசமாகின. இதில், இரண்டாம் உலகப் போரில் சிப்பாய்களை மீட்க பயன்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிய ரக படகு உருக்குலைந்து போனது.

தேம்ஸ் தீவின் ஹாம்ப்டன் பகுதியில் உள்ள பிளாட்ஸ் இயோட் என்கிற அந்தப் படகு குழாமில் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் பயங்கர சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்த உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 100 பேர், 15 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்தை நெருங்கி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் அவர்கள் தொய்வின்றி ஈடுபட்டனர். திங்கள்கிழமை மாலை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், செவ்வாய்க்கிழமை காலை வரை அப்பணியில் அயராது ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். எனினும், உயிரிழப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.

படகு குழாமின் அருகே கொட்டப்பட்ட குப்பைகளில் பற்றி எரிந்த தீ, பின்னர் காற்றில் படகு குழாமிலும் பரவி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவு முழுவதுமாக எரிந்து நாசமானது. இதேபோல், 30 அடி நீளமுள்ள கேபின் க்ரூசர் எனப்படும் படகு ஒன்றும் உருக்குலைந்து போனது. இதுதவிர நான்கு படகுகள் சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து கடல்சார் வரலாற்று ஆய்வாளர் பில் வெயிர் கூறுகையில், இந்த விபத்து கடற்படைக்கும், கடல்சார் பாரம்பரியத்துக்கும் கணக்கிட இயலாத இழப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த படகு குழாமில்தான் முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் தோர்பெடோ படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல், பாரம்பரியமிக்க டங்க்ரிக் லிட்டில் கப்பல்களும் இந்த விபத்தில் சேதமடைந்துவிட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்தன என்றார். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

2 × 3 =