அசாம் முதல்வராக பிஸ்வா சர்மா பதவியேற்பு

 

 

அசாம் மாநிலத்தின் 15ஆவது முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக கூட்டணி கட்சிகளை சேர்ந்த அசாம் கண பரிஷத் கட்சித் தலைவர் அடுல் போரா, அக்கட்சி நிர்வாகி கேஷாப் மகந்தா, லிபரல் ஐக்கிய மக்கள் கட்சியை சேர்ந்த உர்காவ் குவாரா உள்பட 13 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முக்கி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

ஹிமந்த பிஸ்வ சர்மா அமைச்சரவையில் அஜந்தா நியோக் என்ற ஒரே பெண் மட்டும் இடம்பெற்றுள்ளார். 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டப் பேரவையில், அஜந்தாவையும் சேர்த்து 6 பெண்கள் எம்எல்ஏக்களாக அங்கம் வகிக்கின்றனர்.

இதுதவிர பாஜக மாநில தலைவர் ரஞ்சித் குமார் தாஸ், பரிமல் சுக்லபைத்யா, சந்திரமோகன், ரனோஜ் பெகு, சஞ்சய் கிஷண், ஜொகன் மோகன், அசோக் சிங்கால், பிஜுஷ் ஹசாரிகா, பிமல் போரா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

 

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்ட 10 பேர் அசாமிய மொழியிலும், மீதமுள்ள அமைச்சர்கள் போடோ, பெங்காலி மற்றும் ஆங்கிலத்திலும் பதவியேற்றுக் கொண்டனர். அசாமின் பெரும்பாலான பிராந்தியங்களில் மேற்கண்ட 4 மொழிகளும் அலுவல்மொழியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா முதல்வர் கே. சங்மா, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Add your comment

Your email address will not be published.

13 + 13 =