மீண்டும் பழைய தொகுதிக்கே திரும்புகிறார் மம்தா பானர்ஜி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள மீண்டும் தனது தொகுதியான பாபனிபூருக்கே திரும்புகிறார். இதற்காக அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண் துறை அமைச்சருமான சோபன்தேப் சட்டோபாத்யாய், தனது எம்எல்ஏ பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “”அரசியல் அமைப்பு சட்டப்படி, முதல்வர் மம்தா பானர்ஜி 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். இந்தத் தேர்தலில் அவரது சொந்த தொகுதியில் நான் போட்டியிட்டு வென்றேன். இன்றைக்கு அவருக்காக இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கிறேன்” என்றார்.

சோபன்தேப் சட்டோபாத்யாய் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாம்சர்கஞ்ச் அல்லது ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவர் கரோனா தொற்றுக்கு பலியானதால், இங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. ஆகவே, இந்தத் தொகுதியில் சோபன்தேப் சட்டோபாத்யாய் போட்டியிட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியும் அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.

இதனிடையே, அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் 213 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும், மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றியை இழந்ததால், தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

two + 9 =