இந்தியாவிலிருந்து விமான சேவையை தொடங்குகிறது ஆஸ்திரேலியா

 

கரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமான சேவையை அந்நாடு தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் கரோனா தொற்றால் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் நபர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் கடந்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அதிரடியாக அறிவித்தார். இந்தத் தடை உத்தரவு மே 15ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இக்கட்டான தருணத்தில், ஆஸ்திரேலிய மக்களை காக்காமல், கைவிடுவதாக ஸ்காட் மோரிசனுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே, இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இருப்பதாகவும் அவர்களில் சுமார் 600 பேர் கரோனா தொற்றுக்கு எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வகையில் பலவீனமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில், பலவீனமானவர்களை மீட்கும் வகையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமான சேவை தொடங்கப்படும் என அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியது; இந்தியா- ஆஸ்திரேலியா பயண தடை மே 15இல் முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கிறேன். ஆனாலும் இந்தியாவிலிருந்து வணிக ரீதியிலான (கமர்ஷியல்) விமான சேவையை தொடங்குவது குறித்து முடிவு எடுப்பதில், எனது அரசு மேற்கொண்டு ஒரு வாரம் ஆலோசனை நடத்தும் என்றார்.
கமர்ஷியல் விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை தங்களால் செலுத்த இயலாது என்று இந்தியாவில் தவிக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் டான் தெஹான் அளித்த பேட்டியில், 2022ஆம் ஆண்டின் பாதி அல்லது இரண்டாம் பருவத்தின் பாதி காலம் வரை ஆஸ்திரேலியாவின் எல்லை திறக்கப்படாது. ஆனாலும், ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து வழித்தடத்தை போல் மேலும் சில பொருளாதார வழித்தடங்கள் திறக்கப்படலாம் என்றார்.

Add your comment

Your email address will not be published.

fifteen − 8 =