40 வயதுக்குட்பட்டோருக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்த தடை

காரணம் என்ன?

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இரு மடங்கு இருப்பதாக கண்டறியப்பட்டதால், அதை 40 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்துவதற்கு பிரிட்டனில் தடை விதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே பிரிட்டனில் ரத்தம் உறைதல் அச்சம் காரணமாக 18 முதல் 29 வயதுக்குட்பட்டோருக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு மாற்றாக பைஸர் அல்லது மாடர்னா தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தடை அமலுக்கு வருகிறது. அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தி ரத்தம் உறைதல் ஏற்படும்பட்சத்தில், அதன் மூலம் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. அந்த வகையில், 10 லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே மரணிக்கும் அபாயம் இருப்பதாகவும், இதுவரை அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 2 லட்சம் பேரில் வெறும் 19 பேர் மட்டுமே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 15 நாள்களுக்கு முன்பு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில், தீவிர ரத்தம் உறைதலால் பாதிக்கப்படுவர்களின் வீதம் 2,50,000 பேருக்கு ஒருவர் என இருந்தது. தற்போது இந்த நிலை 1,26,600 பேருக்கு ஒருவர் என முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவ உபகரணங்கள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகையால், வயதானவர்களுக்கான தடுப்பூசிக் கொள்கையை மாற்றி அமைப்பது குறித்து தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இணைக்குழு பரிசீலித்து வருகிறது. மேலும், 40 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், ரத்தம் உறைதல் தொடர்பான தரவுகளை மருத்துவ உபகரணங்கள் ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்துவருகிறது.

பிரிட்டனில் இதுவரை ரத்தம் உறைதலால் 51 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியபோதே ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டது. அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள், ரத்தம் உறைதலால் பாதிக்கப்படாத வரை இரண்டாம் தவணையும் செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் மருத்துவ உபகரணங்கள் ஒழுங்குமுறை ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜூன் ரைனே அழைப்பு விடுத்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

five × one =