பழனியில் அரசு கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெரும்பொழுது உதவி மின் பொறியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினால் கைது செய்யப்பட்டார்.
பழனி பாலாறு அணை பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ஒப்பந்ததாரர் மருதராஜ் என்பவர் இணைய வழி மூலமாக விண்ணப்பித்துள்ளார். காலதாமதமானதால் மின்வாரிய அலுவலகம் சென்று விசாரித்துள்ளார். இதில் மின்வாரிய உதவி மின் பொறியாளர் சிவக்குமார் என்பவர் மின் இணைப்பு வழங்குவதற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அரசு கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்ததாரர் மருதராஜ் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியதன் படி சிவக்குமார் மருத ராஜிடம் ஐந்தாயிரம் ரூபாய் பெறும் பொழுது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் கழுவுமாக கைது செய்தனர். மேலும் அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.