விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்று திரும்பிய அமேசான் அதிபர்

 

அமேசான் அதிபர் ஜெப் ஃபெசோஷ் இன்று காலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வான் ஹான் பகுதியில் இருந்து, உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு விண்வெளிக்குப் பறந்தார். இதற்காக அவரது ப்ளூ ஆரிஜின் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்த நியூ ஷெப்பர்டு விமானத்தில் அமேசான் அதிபர் ஜெப் ஃபெசோஷுடன் அவரது தம்பி மார்க் ஃபெசோஷ், 82 வயது அனுபவசாலியான வேல்லி ஃபங்க் மற்றும் 18 வயது கல்லூரி இயற்பியல் மாணவர் ஓலிவர் டீமென் ஆகியோரும் விண்வெளிக்கு பறந்தனர்.

பூமியிலிருந்து சென்ற அடுத்த 2 நிமிடத்தில் சுமார் 100 கிமீ தொலைவைச் சென்றடைந்த அவர்கள், விமானத்தில் இருந்து பிரிந்த கேப்சூலில், விண்வெளியை உலா வந்தனர். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், சுமார் 4 நிமிடம் எடையிழப்பை உணர்ந்த அவர்கள், தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து விண்வெளியில் பறந்தனர்.
ஏற்கனவே கடந்த வாரம் ரிச்சர்ட் பிரான்சன் என்ற கோடீஸ்வரர் விண்வெளிக்கு பறந்து முத்திரை பதித்தாலும், அவரை காட்டிலும் 16 கிமீ தூரம் கூடுதலாக உயர பறந்து சாதனை படைத்தார் அமேசான் அதிபர் ஜெப் ஃபெசோஷ். அதிலும் ரிச்சர்ட் பிரான்சன் சென்ற விமானத்தை இயக்குவதற்கு நன்கு பயிற்சிபெற்ற பைலட்டுகள் இருந்தனர். ஆனால், ஜெப் ஃபெசோஷ் பயணித்த விமானம் முழுவதும் ஆட்டோமேடிக் வசதியுடன், அதை இயக்குவதற்கு யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்து புவியை அங்கிருந்து கண்டுமகிழ்ந்த ஜெப் ஃபெசோஷ் குழுவினர், பின்னர் பாராசூட் உதவியுடன் பூமிக்கு திரும்பினர். விண்வெளிக்கு சென்று திரும்பிய அனுபவம் குறித்து பேசிய ஜெப் ஃபெசோஷ், இது வாழ்நாளின் சிறந்த தருணம் என்றார். அமெரிக்காவின் விண்கலமான அப்பல்லோ நிலவுக்கு முதன்முதலாக சென்று திரும்பிய 52ஆம் ஆண்டு தினமான இன்று, இந்த சாதனையை ஜெப் ஃபெசோஷ் நிகழ்த்தியிருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

one + eleven =