ஐரோப்பாவின் நீண்டகால ஆட்சியாளருக்கு வலுக்கிறது சிக்கல்

பெலாரஸ் நாட்டின் அதிபரும், ஐரோப்பாவின் நீண்டகால ஆட்சியாளருமான அலெக்சாண்டர் லுகான்சென்கோவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதால், அவரது அரசியல் வாழ்வு அஸ்தமனமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

66 வயதாகும் அலெக்சாண்டர், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறவுள்ள பெலாரஸ் அதிபர் தேர்தலில் 6ஆவது முறையாக களம் காண திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில், அவரது ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அவருக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக மின்ஸ்க் நகரில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு, அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது ஆட்சிக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

பெலாரசில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருக்கும் அதிபர் அலெக்சாண்டர், பிரதான செய்தி சேனல்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து, தன்னை எதிர்க்கும் அரசியல் தலைவர்களை துன்புறுத்தி, சிறையில் தள்ளுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால், சோவியத் சகாப்தத்தை நினைவூட்டும் சர்வாதிகாரத்தை அவர் இத்தனை ஆண்டுகளாக கையில் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் பெலாரஸ் அதிபர் தேர்தலில் அலெக்சாண்டரை எதிர்த்து, அவரது பிரதான எதிராளியாக கருதப்படும் ஸ்வேத்லனா திகனோவ்ஸ்க்யா களம்காண்கிறார். தனது கணவரை அதிபர் அலெக்சாண்டர் சிறையில் தள்ளியதால், அவரை பழிக்கு பழி வாங்க போவதாக சவால் விடுத்துள்ள ஸ்வேத்லனா, தேர்தலில் வாக்குகள் முறையாக எண்ணப்பட்டால், 60 முதல் 70 சதவீத இடங்களில் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

twelve − eleven =