கூடுதலாக 6 கோடி பைஸர் நிறுவன தடுப்பூசியை ஆர்டர் செய்தது பிரிட்டன்

 

பிரிட்டனில் கரோனா பரவல் வேகம் குறைந்துவரும் நிலையில், அதை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதலாக 6 கோடி பைஸர் நிறுவன தடுப்பூசிகளை பிரிட்டன் அரசு ஆர்டர் செய்துள்ளது. இதன்மூலம் இதுவரை பிரிட்டனில் ஆர்டர் செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துவிட்டது.
கரோனா தொற்றால் எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நபர்களுக்கு அடுத்த குளிர்காலத்துக்கு முன்பாக அடுத்தகட்ட தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனில் மூன்றில் இரண்டு பங்கு பெரியவர்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 25 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சரவையிடம் விளக்கிய சுகாதாரத்துறை செயலாளர் மாத் ஹான்காக், தடுப்பூசி திட்டத்தை மென்மேலும் துரிதப்படுத்துவது நமக்கு பாதுப்பளித்து நாம் சுதந்திரமாக நடமாடவும், உலகம் முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றார்.
ஏற்கெனவே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவரும் அஸ்ட்ராஜெனிகா, மாடர்னா தடுப்பூசியுடன் பைஸர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியை ஒரு தவணை செலுத்திக் கொள்வதன் மூலம் குடும்ப உறுப்பினர்களிடையே கரோனா பரவல் வேகம் பாதியாக குறைவதாக ஆய்வின் முடிவு தெரிவித்த நிலையில், தற்போது கூடுதலாக 6 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் கடந்த புதன்கிழமை 2,166 பேருக்கு கரோனா உறுதியானது. 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,27,480 ஆக உயர்ந்தது.

Add your comment

Your email address will not be published.

twenty − 20 =