பெட்ரோல் – டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரியில் கசிவு. சுதாரித்துக் கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓரம் கட்டிய ஓட்டுனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போக்குவரத்தை நிறுத்தி தயார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 4,000 லிட்டர் பெட்ரோல், 10,000 லிட்டர் டீசல் ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டத்திற்கு இந்திய ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை அறிந்த ஓட்டுனர் சாதுரியமாக செயல்பட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவையாறு புறவழிச் சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சாலையோரம் நிறுத்தி உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக புறவழிச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தயார் நிலையில் ஈடுபட்டனர்.
மேலும் கசிவு குறித்து ஆயில் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த நான்குக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கூறுகையில், கசிவு ஏற்பட்டதை அறிந்து ஓட்டுனர் சாலையோரம் லாரியை நிறுத்தியுள்ளார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புதுறை தயார் நிலையில் உள்ளதாகவும் இதனால் பயப்படக்கூடிய சூழல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.