200 ஆண்டுகள் கழித்து அதிகாரத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்ட பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், அவரது நீண்டநாள் காதலியுமான கேரியும் சனிக்கிழமை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். 200 ஆண்டுகள் கழித்து ஆட்சியில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்ட 2ஆவது பிரதமர் என்ற பெருமையை போரிஸ் ஜான்சன் தட்டிச் சென்றார்.

இதற்கு முன்னர் கடந்த 1822ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராபர்ட் பேங்க்ஸ் ஆட்சியில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். தற்போது கரோனா தொற்று தடுப்புப் பணியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மும்முரமாக செயல்பட்டு வருவதால், அவரது திருமணம் வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் எளிமையாக நடைபெற்றதாகவும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வரும் கோடை காலத்தில் சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அதுவரை தம்பதியின் தேன்நிலவு தள்ளிப்போடப்பட்டிருப்பதாகவும் அரசு வட்டார செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரதமருக்கு திருமணம் நடைபெற்ற போதிலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு 30 பேர் மட்டுமே பங்கேற்றனர். 56 வயது போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே இருமுறை திருமணமானவர். கத்தோலிக்க திருச்சபைகளுக்கு வெளியே அவரது முந்தைய திருமணங்கள் நடைபெற்றதால், தற்போது அவரது திருமணத்தை கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

two × 4 =