ஏ.சி.க்கு மாற்றாக வெள்ளை பெயிண்ட்

ஏ.சி.க்கு மாற்றாக வெள்ளை பெயிண்ட்


அமெரிக்கா விஞ்ஞானிகள் கின்னஸ் சாதனை

மெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தில் குளு குளு ஏசிக்கு பதிலாக அடர் வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கி, விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தென் சீனாவில் வெளியாகும் மார்னிங் போஸ்ட் என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இன்றைக்கு உலகம் எதிர்கொள்ளும் வெப்பமயமாதல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற பெயின்ட், சூரிய வெப்பத்தில் இருந்து கட்டடத்தை பாதுகாத்து,  தேவையான குளிர்ச்சியையும் கொடுக்கிறது.

இந்த பெயிண்ட் 98.1 சதவீதம் சூரிய கதிர் வீச்சை பிரதிபலித்து, மிகக் குறைந்த அளவே வெப்பத்தை உட்கிரகித்துக் கொள்கிறது. இந்த பெயின்டை ஒரு கட்டிடத்தில் அடிக்கும் போது  சுற்றுபுற வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
1,000 சதுர அடி கொண்ட மாடி பரப்பளவில், இந்த பெயின்டை  ஒரு கோட்டிங் அடித்தாலும், 10 கிலோவாட் மின் ஆற்றலை கொண்ட ஏசி மூலம் கிடைக்கும் அதே அளவு குளிர்ச்சி, இந்த பெயிண்டின் மூலமும் கிடைக்கும் என்பதுதான் இதன் ஹைலைட். 7 ஆண்டுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பலனாக கிடைத்த பெயிண்ட், விரைவில் சந்தைப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.