இயக்குனர் மாரி செல்வராஜூடன் கரம்கோர்க்கும் வைகைப் புயல்

இயக்குனர் மாரி செல்வராஜூடன் கரம்கோர்க்கும் வைகைப் புயல்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உடனான பிரச்சனைக்கு நடிகர் வடிவேலு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்ததைத் தொடர்ந்து அவருக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் கார்டு ரத்து செய்யப்பட்டது. இப்போது வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது,

ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு வெற்றித் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்த படத்திலும் வெற்றிக்கொடி நாட்டி, ஹேட்ரிக் சாதனை படைக்க போவதாக தெரிவித்திருந்தார்.

அதேவேளையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் மற்றொரு படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இது இரு படங்களையும் அவர் ஒரே சமயத்தில் இயக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால், முதலில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான ஷூட்டிங்கை தொடங்க இயக்குனர் மாரிசெல்வராஜ் முடிவு செய்திருக்கிறார்.

மாரி செல்வராஜ் படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் படங்களின் மீது ரசிகர்களுக்கு ஏக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், வடிவேலுவும் அந்த குழுவில் இணைந்து இருப்பதே எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இதற்கிடையே இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற காமெடி படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.