அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்யாவில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைக்கு  ரஷ்யாவில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி. இவர் ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றவர். கடந்த பிப்ரவரி மாதம் கூடைப் பந்து விளையாடுவதற்காக மாஸ்கோ வந்தார். அப்போது விமான நிலையத்தில் இவரது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்த போது, அதில் கஞ்சா எண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கூடைப்பந்து வீராங்கனை கஞ்சா பொருள் எடுத்து வந்தது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கஞ்சாவை பிரிட்னி ஊக்க மருந்தாக பயன்படுத்தி, விளையாட்டில் பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து வெற்றி பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது தன் மீதான குற்றச்சாட்டை பிரட்னி ஒப்புக்கொண்டார். மேலும் தனக்கு கருணை காட்டுமாறு அவர் மன்றாடினார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, விசாரணை நிறைவில் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்யாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அமெரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யா, உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை சப்ளை செய்து வரும் நிலையில், இந்த விவகாரம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.