ரஷ்ய பல்கலைக்கழகத்தில் புகுந்து 8 பேரை சுட்டுக் கொன்ற மாணவர்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,300 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பெர்ம் நகரம். இங்குள்ள புகழ்பெற்ற ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் துப்பாக்கியை ஏந்தியவாறு மாணவர் ஒருவர் வலம்வந்தார். திடீரென துப்பாக்கியை சுழற்றிய அவர், நாலாபுறமும் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார். இதனால், பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் பதறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

துப்பாக்கி சப்தத்தால் கலக்கம் அடைந்த மாணவர்கள், இரண்டாவது தளத்தின் ஜன்னல் வழியாக தங்கள் உடமைகளை கீழே எறிந்தவாறு, அவர்களும் கீழே இறங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, துப்பாக்கிய ஏந்திய மாணவரின் வெறியாட்டத்தில், சக மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார், அந்த மாணவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் விவரம் உடனடியாக வெளியாகவில்லை. விசாரணையில், தனது தனிப்பட்ட முடிவின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறிய அவர், அரசியல், மத நோக்கத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வு ரஷ்ய வரலாற்றின் கருப்பு பக்கத்தில் இடம்பெறும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.