'ஓவர்நைட்'டில் கோடீஸ்வரரான ஏழை விவசாயி

'ஓவர்நைட்'டில் கோடீஸ்வரரான ஏழை விவசாயி

பீகாரில் அடுத்தடுத்து 'ஜாக்பாட்'

ந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் பீகாரும் ஒன்று. அங்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தான் அம்மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கம்பி கட்டும் தொழிலில் சொற்ப வருமானத்துக்கு இரவு, பகலாக கஷ்டப்படுகின்றனர்.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராம்பகதூர் ஷா என்பவரின் வங்கிக்கணக்கில், 52 கோடி ரூபாய் கிரெடிட் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் விவசாயிகளுக்கான பென்ஷன் திட்ட பயனாளியான அவர், தனது கணக்கில் பிரதமர் மோடி ஏதாவது பணம் செலுத்தியிருக்கிறாரா என்பதை அறிய வங்கிக்குச் சென்றபோதுதான், இந்த விவரம் அவருக்கு தெரியவந்தது.

ஆனால், 'நேர்மை' தவறாத வங்கி ஊழியர்கள், விவரத்தை அவரிடம் எடுத்துக் கூறி, அவரை வழக்கம்போல வெறும் கையுடன் அனுப்பிவைத்தனர். இதனால், நொடிந்துபோன ராம்பகதூர் ஷா, தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க, 52 கோடி ரூபாயில் கொஞ்சத்தையாவது தனக்கு தரக்கூடாதா என வங்கி ஊழியர்களிடம் மன்றாடி பார்த்தார். ஆனாலும், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பீகாரில் இவரை போல் ஓவர்நைட்டில் 'ஒபாமா' ஆனவர்களின் பட்டியல் சமீப நாள்களில் நீண்டுகொண்டே போகிறது. சமீபத்தில் கூட கட்டிஹர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆசிஷ்குமார், குருசந்த் விஷ்வாஸ் ஆகியோர் தங்களுக்கான ஸ்காலர்ஷிப் வந்துவிட்டதா என வங்கிக் கணக்கை ஆராய்ந்தபோது, அதில் ரூ.962 கோடி கிரெடிட் ஆகியிருந்தது தெரியவந்தது. இதனால், இருவரும் மலைத்துப் போனார்கள். ஆனாலும், அந்தத் தொகையை வங்கி நிர்வாகம் திரும்ப பெற்றுக் கொண்டது.

ககரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கிரெடிட் ஆகியிருந்தது. பிரதமர் மோடிதான் ஏதோ விவசாயிகள் மீது 'திடீரென' பாசம் வைத்து பணத்தை செலுத்திவிட்டாரோ என்ற நப்பாசையில், அந்தத் தொகையை அவர் வங்கி நிர்வாகத்திடம் செலுத்த மறுத்துவிட்டார். இதனால், 'கடமை' தவறாத காவல் துறையினர், அந்த நபரை கைது செய்து சிறையில் தள்ளினர்.
பீகாரில்  இதுபோல திடீர் கோடீஸ்வரர்கள் உருவெடுப்பதால், ஒவ்வொருவரும் அடிக்கடி தங்கள் வங்கிக் கணக்கை சோதித்து பார்த்த வண்ணம் இருக்கின்றனர். எல்லாம் சரி, இந்த நடைமுறை தவறுக்கெல்லாம் காரணமான வங்கி ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதே சாமானியர்களின் கேள்வியாக இருக்கிறது. மெய்ப்பொருள் காண்ப தறிவு ஆபிசர்ஸ்...