in

அமெரிக்க அரசியலில் ஜோ பைடன் ஆதரவு சரிவு


Watch – YouTube Click

அமெரிக்க அரசியலில் ஜோ பைடன் ஆதரவு சரிவு

 

ஜோ பைடன் ஆதரவு சரிவு

அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில் இரண்டு முக்கிய கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று ஜனநாயக கட்சி. மற்றொன்று குடியரசு கட்சி. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினாலும், இந்த இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கு இடையேதான் உண்மையான போட்டி இருக்கும்.

இந்த சூழிலில், அமெரிக்க அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, வரும் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக பைடன் அறிவித்தார்.

பைடனை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தல் போட்டியில் உள்ளனர். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி ஆகியோர் அதிபர் தேர்தல் போட்டியில் உள்ளனர்.

குடியரசு கட்சியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் அதிபர் தேர்தலில் இருந்து விலகினர். போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து இருவரும் டிரம்ப்-க்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

ஜனநாயக கட்சியில் நடந்து வரும் உட்கட்சி (Primary) தேர்தலில் பைடனும் குடியரசு கட்சியில் நடந்து வரும் உட்கட்சி தேர்தலில் (Primary) டிரம்பும் வெற்றிபெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தெற்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பைடன் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தெற்கு கரோலினாவில் ஜனநாயக கட்சியினரின் 96.4 சதவிகித வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரியான் வில்லியம்சன் 2 சதவிகித வாக்குகளையும் டீன் பிலிப்ஸ் 1.6 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளனர். கடந்த அதிபர் தேர்தலின்போது, உட்கட்சி தேர்தலில் தொடர் சவால்களை சந்தித்த பைடனுக்கு தெற்கு கரோலினாதான மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது. அந்த வகையில், இந்த முறையும் தெற்கு கரோனா அவருக்கு பெரும் ஆதரவை பெற்று தந்துள்ளது.

குறிப்பாக, பைடனின் வெற்றியில் கறுப்பினத்தவர் பெரும் பங்காற்றினர். கடந்த முறையை போன்று, இந்த முறையும் அவர் எந்தளவுக்கு கறுப்பின மக்களின் வாக்குகளை ஈர்க்கப் போகிறார் என்பது மிக பெரிய கேள்வியாக மாறியுள்ளது. ஏன் என்றால், கடந்த முறை ஆதரவு அளித்த போதிலும், பதவியில் அமர்ந்த பிறகு, தங்களின் பிரச்னைக்கு பைடன் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கறுப்பினத்தவர் கருதுகின்றனர்.

சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளில், கறுப்பினத்தவர் மத்தியில் பைடனுக்கான ஆதரவு குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. இது, ஜனநாயக கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஆனால், அனைத்து சவால்களையும் கடந்து கடந்த முறையை போல் இந்த முறையும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற பைடன் முனைப்பு காட்டி வருகிறார்.

தெற்கு கரோவினாவை பொறுத்தவரையில், குடியரசு கட்சியின் கோட்டையாக உள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு முதல், இங்கு குடியரசு கட்சி வேட்பாளர்தான், வெற்றிபெற்று வருகின்றனர். அந்த வகையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில், இங்கு குடியரசு கட்சியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்படும் பட்சத்தில் அது குடியரசு கட்சி மேலும் எளிதாக மாறிவிடும் என கூறப்படுகிறது.

கடந்த தேர்தலை போல், ஜனநாயக கட்சி சார்பில் பைடனும் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது. தெற்கு கரோவினாவில் பைடன் வெற்றிபெற்றதன் மூலம் அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அயோவா மாகாணத்தை தொடர்ந்து நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலிலும் டிரம்ப் வெற்றிபெற்றார். அவருக்கு போட்டியாக இருக்கும் ஒரே நபர் நிக்கி ஹேலி.

நிக்கி ஹேலியின் சொந்த மாகாணமான தெற்கு கரோவினாவில் நிக்கி ஹேலி தோற்க்கும் பட்சத்தில், குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்படுவார். கடந்த முறையை போன்று, இந்த முறையும், அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனும் டிரம்பும் போட்டியிடும் பட்சத்தில் போட்டி மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்சாஸ், இடாஹோ, இந்தியானா, அயோவா, கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, மிசோரி, மொன்டானா, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹோமா, தெற்கு கரோலினா, தெற்கு டகோட்டா, டென்னசி, டெக்சாஸ், உட்டா, வெஸ்ட் வர்ஜீனியா ஆகியவை குடியரசு கட்சியின் கோட்டைகளாக உள்ளன.

அதேபோல, கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மைனே, மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஓரிகான், ரோட் தீவு, வெர்மான்ட், வர்ஜீனியா, வாஷிங்டன் ஆகியவை ஜனநாயக கட்சியின் கோட்டைகளாக உள்ளன.

அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, மிச்சிகன், மினசோட்டா, நெவாடா, வட கரோலினா, ஓஹியோ, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் மாறி மாறி வெற்றிபெற்று வருகின்றன. இதில், பெரும்பான்மையான மாகாணங்களை யார் கைபற்றுகிறார்களா அவர்களே அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவார்கள்.


Watch – YouTube Click

What do you think?

பொது தேர்வில் காப்பி அடித்தால் 10 ஆண்டு சிறை – 1 கோடி அபராதம்

நடிகர் விஜய்க்கு இருக்கும் சவால்கள்…சந்திப்பாரா? துவண்டு போவாரா?