அட்லாண்டிக் பெருங்கடலில் 16 மணி நேரம் தத்தளித்த முதியவர் மீட்பு

அட்லாண்டிக் பெருங்கடலில்  16 மணி நேரம் தத்தளித்த முதியவர் மீட்பு

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பானில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் 62 வயது மதிக்கத்தக்க பிரான்ஸ் முதியவர் படகில் சென்றார். சுமார் 12 அடி நீளம் உடைய அந்த சிறிய படகு, நடுக்கடலில் சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மிதவையை பயன்படுத்தி முதியவர் கடலில் தத்தளித்தார்.

இதற்கிடையே அந்த படகிலிருந்து சுமார் 14 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் ரோந்து சென்ற ஸ்பெயின் கப்பலுக்கு அபாய சிக்னல் சென்றது. இதை அறிந்த ஸ்பெயின் கடற்படையினர், உடனடியாக சம்பவ இடத்தை நெருங்கினர். அந்த ஸ்பெயின் கப்பலில் ஐந்து நீச்சல் வீரர்களும் மூன்று ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் இருந்தன.

இருப்பினும் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மறுநாள் காலை சூரியன் உதித்த பிறகே மீட்பு பணியை ஸ்பெயின் கடற்படை வீரர்களால் தொடர முடிந்தது. ஏறத்தாழ 16 மணி நேரம் கழித்து அந்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று கருதிய நிலையில், மூச்சை கையில் பிடித்துக் கொண்டு 16 மணி நேரம் உயிருக்கு போராடியது தங்களுக்கு வியப்பை ஏற்படுத்துவதாக ஸ்பெயின் கடற்படையினர் தெரிவித்தனர்.