பிரான்சில் துப்பாக்கி மருந்து ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து

பிரான்சில் துப்பாக்கி மருந்து ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து

பிரான்சின் பெர்கராக் நகரில் துப்பாக்கி மருந்து ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், எட்டு பேர் காயமடைந்தனர்.

பெர்கராக் நகரில் செயல்பட்டு வரும் இந்த ஆலையில், துப்பாக்கிக்கு தேவையான தோட்டாக்களும் வெடி மருந்துகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு நேற்று ஊழியர்கள் பணியில் இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி நாலாபுரமும் சிதறி ஓடினர். எனினும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அதில் எட்டு பேர் அகப்பட்டுக் கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 60 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் தீயணைப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பெர்கராக் நகர மேயர் ஜோனதான், அந்த ரசாயன ஆலை மிகுந்த பாதுகாப்பான முறையில் கட்டமைக்கப்பட்டு செயல்பட்டு வந்ததாக கூறினார்.