இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியோடு நிறைவடைகிறது.
ரவி சாஸ்திரிக்கு மீண்டும் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. எனவே, புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது.
இதனால் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, அனுபவ பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆகியோரை அணுக பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2016 -17 ஆம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கும்ப்ளேவை சச்சின், லக்ஷ்மன், கங்குலி ஆகியோர் கொண்ட மூவர் கிரிக்கெட் குழு நியமித்தது.
ஆனாலும், கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவும், சாம்பியன்ஸ் கோப்பை இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததாலும், பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் கும்ப்ளே.
மேலும் டெஸ்ட் பேட்ஸ்மேனான வி.வி.எஸ். லக்ஷ்மன் தற்போது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கும்ப்ளே, லக்ஷ்மன் ஆகியோரை அணுக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதற்கான தவறை சரிசெய்ய வேண்டியிருக்கிறது. கோலியின் அழுத்தத்துக்கு ஆளாகி சிஇஓ கும்ப்ளேவை அகற்றியது. அது சரியான நடவடிக்கை இல்லை. பயிற்சியாளராக செயல்பட்ட கும்ப்ளே, லஷ்மண் ஆகியோர் முன்வர வேண்டும் என்றார்.
ஏற்கனவே டி 20 உலகக் கோப்பையுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக  விராட் கோலி அறிவித்துள்ளார். இந்திய அணிக்கு பயிற்சியாளராக சிறந்த முன்னாள் வீரர்களையே நியமிக்க பிசிசிஐ விரும்புகிறது. கும்ப்ளே, லக்ஷ்மன் இருவரும் 100 டெஸ்ட் ஆட்டங்களுக்கு மேல் ஆடிய அனுபவம் நிறைந்தவர்கள்.
தற்போது பேட்டிங் பயிற்சியாளராக உள்ள விக்ரம் ரத்தோர், தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கான நிலையில் இல்லை. அவர் சிறந்த உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.