கொழும்பு துறைமுக கன்டெய்னர் முனையத்தை அதானி குழுமம் மேம்படுத்துகிறது

கொழும்பு துறைமுக கன்டெய்னர் முனையத்தை அதானி குழுமம் மேம்படுத்துகிறது

இலங்கை தலைநகர் கொழும்பு மேற்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்தவும், செயல்படுத்தவும் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்தை இந்திய நிறுவனம் செயல்படுத்த அனுமதி அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் கொழும்பு துறைமுக ஆணையம் மற்றும் இலங்கை நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸுடனும்  மேற்கொண்டுள்ளது. அதில், மேற்கு கன்டெய்னர் முனையத்தில் அதானி குழுமத்துக்கு 51 சதவீத பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கன்டெய்னர்களை வெளிநாட்டு கப்பல்களில் ஏற்றிச் செல்வதில் இலங்கை துறைமுகம் முக்கிய பங்காற்றி வருகிறது. முன்னதாக, கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்த இந்தியா- ஜப்பானுடன் 2019 இல் இலங்கையின் முன்னாள் அதிபர் சிறீசேனா அரசு ஒப்பந்தம் செய்தது.
 
இதன் மூலம் இந்திய -ஜப்பான் முதலீட்டாளர்களிடம்  இலங்கை துறைமுக ஆணையத்தின் 49 சதவீத பங்குகள் செல்லக்கூடும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை கொழும்பு துறைமுக தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்தானது. சர்வதேச ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்த இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியாவும், ஜப்பானும் கண்டனம் தெரிவித்திருந்தன.
முன்னதாக, உள்கட்டுமான திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து இலங்கை சுமார் எட்டு பில்லியன் டாலர்களை கடனாக பெற்றுள்ளது. இதற்கு கைம்மாறாக இலங்கை அரசு 2017 அம்பாந்தோட்டா துறைமுக நிர்வாகத்தை சீனாவுக்கு அளித்தது.