82 ஆண்டுகளாக மாயமான ஓவியம் முதன்முறையாக கண்காட்சியில் இடம்பெறுகிறது

 

82 ஆண்டுகளாக மாயமான புகழ்பெற்ற ஓவியர் எரிக் வில்லியம் ரவிலியஸ் வரைந்த ஓவியம், முதன்முறையாக இங்கிலாந்தின் சசக்ஸ் நகரில் நடைபெறவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
கடந்த 1939ஆம் ஆண்டில் ரவிலியஸ் வரைந்த அந்த ஓவியம், அதற்கு அடுத்த ஆண்டில் தனிநபர் ஒருவருக்கு 15 கினியாக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த ஓவியம் என்ன ஆனது, எங்கிருக்கிறது என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், மே 27-ஆம் தேதி சசக்சில் நடைபெறவுள்ள ‘கடலோர நவீன கண்காட்சி’யில், 82 ஆண்டுகால இடைவெளியில் அந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இதையொட்டி, அதன் தற்போதைய உரிமையாளர் அந்த ஓவியத்தை கடனுக்கு வழங்கியிருக்கிறார்.
ரவிலியசின் ஓவியம் மறுபடியும் காட்சிப்படுத்தப்படுவது அவரது ரசிகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கலை வரலாற்று ஆய்வாளரும், கண்காட்சி ஒருங்கிணைப்பாளருமான ஜேம்ஸ் ரஸ்ஸல் கூறினார். மேலும், அந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு 25 ஆயிரம் பவுண்டுக்கு குறையாமல் இருக்கலாம் என்று கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டில் ரவிலியஸ் வரைந்த மற்றோர் ஓவியம் இதே மதிப்பில் விற்பனையாது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கண்காட்சியில் 1920- 1970 ஆம் ஆண்டுவரை ஓவியக் கலைஞர்களுக்கும், கடற்கரைக்கும் இடையில் இருந்த பிணைப்பை பறைசாற்றும் வண்ண் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் எல்.எஸ். லவ்ரி, ரிச்சர்ட் யூரிச், பால் நாஷ், லாரா நைட், வில்லியம் ராபர்ட்ஸ், ஹென்றி மூரே, பார்பரா ஹெப்வோர்த் ஆகிய கலைஞர்களின் ஓவியங்களும், சிற்பங்களும், வரைபடங்களும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து கண்காட்சி இயக்குநர் லிஸ் கில்மோர் கூறும்போது, ”தேசிய மற்றும் பொருளாதார அளவில் கலாசாரத்தை மீட்டெடுக்கவும், உள்ளூர் அளவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.
கிழக்கு சசக்ஸ் பகுதியில் வளர்ந்த பிரபல ஓவியர் ரவிலியஸ், போர்க்கால நிகழ்வுகளை தத்ரூபமாக வரைவதில் கைதேர்ந்தவர். அவர் கடந்த 1920 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலானவை, இரண்டாம் உலகப் போரில் மாயமாகியிருக்கலாம் அல்லது சேதமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

six − five =