72 வயதில் காதலியை கரம் பிடித்த புற்றுநோயாளி

 

இங்கிலாந்தில் குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 72 வயது முதியவர், தனது 18 ஆண்டுகால காதலியை புதன்கிழமை கரம்பிடித்தார்.

ஜேப் தாமஸ் என்கிற அந்த முதியவர், கடந்த 2019ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார். இதன் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவர் டெர்பியில் உள்ள அபிடேல் நர்சிங் இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவரும், கணவரை இழந்த பாலின் முராய் என்ற 72 வயது மூதாட்டியும் கடந்த 18 ஆண்டுகாலமாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், கரோனா பொது முடக்க காலத்தில் ஜேப் தாமஸ் தங்கியிருந்த இல்லத்துக்குள் வெளியாள்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதால், இருவரும் சில வார காலம் சந்திக்க முடியாமல் மனம் வெதும்பினர்.

தற்போது பொது முடக்கத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால், இருவரும் அண்மையில் சந்தித்து அளவளாவினர். இதைத்தொடர்ந்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, அவர்களது திருமணம் ஜேப் தாமஸ் தங்கியிருந்த இல்லத்திலேயே புதன்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது. இதற்காக காண்டர்பெரி தேவாலய போதகர் சிறப்பு அனுமதியும் அளித்திருந்தார்.
இதுகுறித்து புதுமணத் தம்பதி கூறுகையில், எத்தனை நாள்கள் முடியுமோ அத்தனை நாள்களையும் இருவரும் இணைந்து மகிழ்ச்சிகரமாக கழிக்க நினைக்கிறோம் என்றனர். மேலும், தனது 18 ஆண்டுகால காதலியை கரம்பிடித்தது குறித்து ஜேப் தாமஸ் கூறுகையில், உண்மையில், திருமணம் செய்து கொள்வதை மிகவும் மென்மையான உணர்வாக நான் கருதுகிறேன். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன், போற்றுகிறேன் என்றார்.
பாலின் கூறுகையில், எனது பெயருக்கு பின்னால், அவரது பெயரை இணைத்துக் கொள்வதை அருமையான உணர்வாக கருதுகிறேன். புதுமண தம்பதியை போல, நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் அந்நியோந்யமாக இருக்கிறோம் என்றார்.

Add your comment

Your email address will not be published.

11 + 19 =