5.56 லட்சம் தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் தமிழகம் வந்தது; ஜன.16 முதல் போடப்படும்: இன்று மாலை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படும் | 5.56 lakh vaccines arrived in Tamil Nadu by air; Will be put up from Jan.16: Will be distributed to districts this evening

தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5.56 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன. இன்று மாலை அவை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு ஜன.16 முதல் போடப்படும்.

புனேவில் மஞ்சரி பகுதியில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து குளிர்பதன வசதி செய்யப்பட்ட 3 டிரக்குகளில் முதல் கோவிஷீல்ட் மருந்து லோடு ஏற்றப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு விமான நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு டிரக்கிலும் 478 பெட்டிகள் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டன. ஒரு பெட்டியின் எடை 32 கிலோ உள்ளதாகக் கூறப்படுகிறது. டிரக்குகள் அனைத்தும் புறப்படும் முன் வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டன. மருந்துகள் புனேவிலிருந்து விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

8 பயணிகள் விமானம் மூலமும், 2 சரக்கு விமானங்கள் மூலமும் இந்த மருந்துகள் அந்தந்த நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 5.36 லட்சம் கோவிஷீல்டு மருந்துகள் மற்றும் 20,000 கோவாக்சின் மருந்துகள் விமானம் மூலம் இன்று காலை 10.20 மணிக்கு சென்னை வந்தடைந்தன.

5,56,000 தடுப்பூசிகள் முதல் கட்டமாக சென்னை வந்துள்ளன. இதைப் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் வினய் பெற்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்திற்குக் கொண்டு செல்கிறார். அங்கிருந்து அவை பிரிக்கப்பட்டு முதல் கட்டமாக 10 மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

தடுப்பூசிகளுக்குரிய சோதனை மற்றும் தேவைப்படும் மாவட்டங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து அனுப்பும் முதற்கட்டப் பணிகள் முடிந்தவுடன் மாலையில் வாகனங்கள் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். 2,800 மையங்கள் தமிழகம் முழுவதும் தயாராக உள்ளன. தற்போது 10 சேகரிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

முதற்கட்டமாக மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், தன்னார்வலகளுக்குத் தடுப்பூசி போடப்படும். 16-ம் தேதி முதல் இந்தத் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன என்று சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை